By Village Missionary Movement
Friday, 25-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 25.04.2025
பாழானதைத் தேறுதலடையச் செய்கிறவர்
"...என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்;..." - ஏசாயா 51:6
பெஞ்சல் புயல் மகாபலிபுரத்தில் கரையைக் கடக்கும் போது வட மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. மணிக்கு 70 லிருந்து 90 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசியது. பெஞ்சல் புயல் நிலத்தைத் தாக்கியவுடன் அதன் பயங்கரமான விளைவுகளை மீட்புக் குழுவினரால் பார்க்க மட்டுமே முடிந்தது. புயலின் கனமழைக்கு முன்பாகவும், மழையினால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவின் முன்பாகவும், ஏரிகள் நிரம்பியதால் ஒரு நிமிடத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தில் மீட்புக் குழுவினர் எந்த விதமான உதவியும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்தனர்.
ஆனால் நம்முடைய வாழ்வில், நமக்கு வருகிற இழப்புகளை எதிர் கொள்ளும் போதெல்லாம், தேவனுடைய வார்த்தைகள், வாக்குத்தத்தங்கள் மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றன. ஏசாயா 51:3 ல் அவர் பாழான ஸ்தலங்களை தேறுதலடையச் செய்து, அதின் அவாந்தர வெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார் என்று கூறுகிறது. எனவே எப்படிப்பட்ட பாதிப்பாயிருந்தாலும் நமக்கான நன்மை ஒரு போதும் தடைபடாது.
உலகத்தில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு. ஆனால் பாழானவைகளைக் கட்டி எழுப்புகிற தேவன் நம் வலப் பக்கத்தில் இருப்பதனால், இழப்புகள் எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும் "தேவனுடைய இரட்சிப்பு என்றென்றைக்கும் இருக்கும்" என்று ஏசாயா 51:6 கூறுகிறது. ஆம், நம் ஆண்டவர் வனாந்தரத்தை வயல்வெளியாகவும், பாழ்நிலத்தை பயிர்நிலமாகவும் மாற்றவல்லவர். ஆகவே தேவன் பேரில் விசுவாசமாயிருப்போம்.
பிரியமானவர்களே! நீங்கள் எந்த மாதிரியான இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? "உலகத்தைச் சுதந்தரிப்பான்" என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது என்று ரோமர் 4:13 சொல்கிறது. நாமும் " பாழானதை தேறுதலடையச் செய்வேன்" என்கிற தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பதையே தெரிந்து கொண்டு, தேவனிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இரட்சிப்பை, விடுதலையை நன்மைகளை சுதந்தரித்துக் கொள்வோம்.! ஆமென்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
38 மாவட்டங்களிலும் நற்செய்தியாளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864