By Village Missionary Movement
Tuesday, 22-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 22.04.2025
காத்திருக்கிற தேவன்
"...உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்,...” - ஏசாயா 30:18
காத்திருப்பது என்பது ஒரு கடினமான அனுபவம்தான். தேவனால் உயர்த்தப்படுவதற்கும், ஆசீர்வதிக்கப்படுவதற்கும் காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. மொட்டு மலராய் மலர்வதற்கும், காய் கனியாவதற்கும் காத்திருத்தல் அவசியம். தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நம்மில் நிறைவேறுவதற்கு ஆண்டவருடைய நேரத்திற்காக காத்திருத்தல் மிக அவசியம்
வேதத்தில், விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமை நாம் அறிவோம். கர்த்தர் ஆபிரகாமை அழைக்கும் போது அவருக்கு 75 வயது. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமிடம் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதி 12:3,4). ஆபிரகாமும் கர்த்தர் சொல்லுக்கு இணங்கி, 25 ஆண்டுகள் காத்திருந்து வாக்குத்தத்த மகனாகிய ஈசாக்கை பெற்றுக்கொண்டார். (ஆதி 21:5). இங்கு நாம் பார்க்கும் போது, ஆபிரகாமும் காத்திருந்தார். ஆபிரகாமை அழைத்த கர்த்தரும் வாக்குத்தத்தத்தை கட்டளையிட காத்திருக்கிறார். நிச்சயம் அவர் தேவனுடைய சொல்லுக்கு காத்திருந்த போது பல இன்னல்களை சந்தித்து இருக்கலாம். ஆனால் அவருக்கு நிச்சயம் தெரியும் கர்த்தர் தன்னை வெட்கப்படுத்த மாட்டார் என்று. ஆம், விசுவாசத்துடன் காத்திருந்த ஆபிரகாமே விசுவாச தகப்பனானார்.
பிரியமானவர்களே! காத்திருக்கிற நேரங்கள், காலங்கள் ஒரு நாளும் வீணாகப் போவதில்லை. நாம் காத்திருக்கிற காலங்களில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதியானவர்களா? என அவர் நம்மை ஆராய்ந்து, அவர் கொடுக்கின்ற ஆசீர்வாதங்களுக்கு தக்கதான பாத்திரங்களாக நம்மை சரிசெய்கிறார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:31)ஆம், கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களுக்கு புதுபெலன் கிடைக்கும். காத்திருந்த ஆபிரகாமை கர்த்தர் வெட்கப்படுத்தவில்லை. நம்மையும் வெட்கப்படுத்தமாட்டார். ஏனென்றால் வாக்குப் பண்ணினவர் உண்மையுள்ளவர். நாம் அவருக்கு காத்திருக்கும் போது காலதாமதம் ஆகலாமே தவிர, காலாவதி ஒரு நாளும் ஆகாது. காத்திருக்கும் போது ஏன், எதற்கு என்ற கேள்விகள் நிச்சயம் எழலாம். ஆனால் நிச்சயம் பதில் உண்டு.
- Bro. குமார்
ஜெபக்குறிப்பு:
வட மாநில மிஷனெரிகளின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864