By Village Missionary Movement
Sunday, 20-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 20.04.2025 (Kids Special)
"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்…" - வெளி. 1:18
இயேசு உயிர்த்தெழுந்தார்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை. எங்கும் கும்மிருட்டு! அப்பொழுது மகதலேனா மரியாள் என்ற அக்காவும் இன்னும் ஒருசில பெண்களும் வேகமாக எங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் சோகம், அழுது அழுது கண்கள் வீங்கி இருந்தன. மரியாளின் கையிலிருந்த சுகந்தவர்க்கம் மணம்வீசிக் கொண்டிருந்தது. அவர்கள் வேகவேகமாக கல்லறைத்தோட்டத்திற்குள் நுழைந்தனர். இந்த இருட்டுவேளையில் பயமில்லாமல் கல்லறைத்தோட்டத்திற்கு செல்கிறார்களே எதற்கு என்று யோசிக்கிறீர்களா? இரண்டு நாளைக்கு முன்பு சிலுவையில் மரித்த இயேசுகிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்று சுகந்த வர்க்கமிடத்தான் சென்றனர்.
இயேசுவின் கல்லறைக்கு அருகில் சென்றபோது திடுக்கிட்டு நின்றனர். என்ன நடந்தது தெரியுமா? பூமி மிகவும் அதிரும்படியாக ஒரு ஏஞ்சல் வானத்திலிருந்து இறங்கி வந்தார். கல்லறையை மூடி வைத்திருக்கிற கல்லை புரட்டி தள்ளிவிட்டு அதன் மேல் உட்கார்ந்தார். அவரைப் பார்த்து பயத்தில் உறைந்து நின்றுகொண்டிருந்த அக்காவையெல்லாம் பார்த்த அந்த ஏஞ்சல்,"பயப்படாதீங்க, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத்தானே தேடுறீங்க. அவர் கல்லறைக்குள் இல்லை. உயிரோடெழுந்துவிட்டார். அவரை வைத்த இடத்தை வேண்டுமானாலும் வந்து பாருங்கள்" என்றார். அவர்கள் கல்லறைக்குள் எட்டி பார்த்தபோது இயேசு அங்கு இல்லை.
இவர்களுக்கு ஒருபக்கம் பயமாயிருந்தாலும், மறுபக்கம் இயேசு உயிரோடு எழுந்துவிட்டார் என்ற பெரிய சந்தோஷம். உடனே இந்த Good News சீஷர்களிடம் போய் சொல்லுவோம் என்று வேகவேகமாக ஓடினார்கள். அப்படி போகிறபோது இயேசுதாமே அவர்களுக்கு எதிராக வந்து நின்று "வாழ்க" என்றார். அவர்கள்,"ஐயோ ஆவியாக இருக்குமோ!" என்று பயந்து நடுங்கிக்கொண்டு மெல்ல அவர் அருகே வந்து அவர் கால்களைத் தழுவி, இயேசுவைப் பணிந்துகொண்டார்கள். உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க ஓடோடிச்சென்று கவலையோடு அழுதுகொண்டிருந்த சீஷர்களிடத்திற்கு போய், மூச்சு வாங்க நின்று,"இயேசு உயிரோடெழுந்துவிட்டார்" என்று சொன்னார்கள். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
அன்பான தம்பி தங்கச்சி! இன்னைக்கு என்ன Day தெரியுமா? ஈஸ்டர்! அப்படின்னா மரித்துப்போன இயேசப்பா உயிரோடு எழுந்த நாள். ஆமாம், உலகத்தில் இருக்கிற எல்லா கல்லறைகளும் மூடித்தான் இருக்கும். ஆனால் ஒரே ஒரு கல்லறை மாத்திரமே திறந்திருக்கிறது. அது இயேசுகிறிஸ்துவின் கல்லறை மட்டும்தான். ஆம், இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். உயிரோடிருக்கிறது மாத்திரமல்ல, நாம் கூடியிருக்கும் இந்த இடத்திலும் நம் மத்தியில் இருக்கிறார். எவ்வளவு பெரிய சந்தோஷம்! ஆம், நாம் வணங்கும் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தெய்வம். அல்லேலூயா!
- Mrs. எபன் சந்தோஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864