By Village Missionary Movement
Monday, 14-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 14.04.2025
விசுவாசமுள்ள ஜெபம்
"அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்" - யாக்கோபு 5:15
அமெரிக்க தேசத்திலே மாற்கு என்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கருத்தரங்கில் பேச வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். அன்று பனி மழை கனமாக பெய்து கொண்டு இருந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் அவர் கட்டாயம் போயே ஆக வேண்டும் என்ற நிலை. ஒரு வாடகை கார் அமர்த்தி கொண்டு கிளம்பினார். ஆனால் மழை காரணமாக ஒரு குறிப்பிட்ட ஊருக்கு மேல் வாகனம் முன்னேறி செல்ல இயலவில்லை. எனவே அந்த வாகனத்தை ஓட்டுபவர் "ஐயா! இதற்கு மேல் நாம் பயணத்தை தொடர்வது ஆபத்து. இங்கே எங்காவது தங்க முடியுமா? என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டு வண்டியை நிறுத்தி விட்டார்.
தொலைவில் ஒரு விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அந்த மருத்துவர் வண்டியை விட்டு இறங்கி அந்த வீட்டு கதவை தட்டினார். ஒரு தாயார் வந்து கதவை திறந்து அவரை உள்ளே வரும்படி அழைத்து, அவரை உபசரித்தார். பின்பு அவரிடம் ஹாலில் ஓய்வெடுக்க சொல்லி விட்டு ஒரு சிறிய அறைக்குள் சென்று ஜெபிக்கத் தொடங்கினார். அந்த மருத்துவர் அந்த அறையை எட்டி பார்த்தார். அங்கு ஒரு கட்டிலில் மிகவும் மோசமான நிலையில் ஒரு வாலிபன் படுத்து இருந்தான். அருகில் அந்த தாயார் ஜெபித்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் வெளியே வந்த உடன் அந்த மருத்துவர் " அந்த படுக்கையில் இருப்பது யார்? என வினவினார். அந்த தாயார் அவன் என் மகன் பல வருடங்களாக புற்றுநோயால் அவதிபடுகிறான் என்று கூறினார். மருத்துவம் செய்யவில்லையா? என வினவினார். சிறந்த மருத்துவர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார் அவரிடம் கூட்டிச் செல்ல எனக்கு வசதி இல்லை. ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் அவர் எனக்கு நிச்சயம் உதவி செய்வார் என்று அந்த தாயார் கண்ணீரோடு கூறினார். அந்த மருத்துவர் மிக்க ஆச்சரியத்தோடு, அந்த மருத்துவர் தான் நான் என்று சொல்லி தன் சொந்த செலவில் அவர்களை அமெரிக்கா அழைத்து சென்று அந்த வாலிபனுக்கு மருத்துவம் பார்த்து அவனை சுகப்படுத்தினார்.
வேதத்தில் லூக்கா 13 ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கே 18 வருடமாய் எவ்வளவும் நிமிர முடியாத கூனி இருந்தாள். அவள் மேல் இயேசு கிறிஸ்து தம் கைகளை வைத்தார் உடனே அவள் நிமிர்ந்து தேவனை மகிமை படுத்தினாள். அவள் தேவாலயத்திற்கு அனுதினமும் வந்து ஜெபித்து கொண்டு இருந்திருப்பாள். 18 வருடமாக அவள் செய்த ஜெபம், தேவன் நியமித்த நாளில் அவருடைய வல்லமை வெளிப்படும்படி அவளுக்கு அந்த ஓய்வு நாளில் சுகம் கிடைத்தது.
ஆம், விசுவாசத்தோடு நாம் செய்யும் ஜெபத்திற்கு நிச்சயம் ஆண்டவர் பதில் தருவார். பதில் வர தாமதம் ஆகலாம். ஆனால் பதில் வராமல் இருக்காது. நாம் விசுவாசிக்கும் போது நிச்சயம் தேவனின் மகிமையை காண்போம். விசுவாசத்தோடு ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு இணைந்துள்ள தோழமை ஊழியர்களின் சுகத்திற்காக, செய்யும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864