By Village Missionary Movement
Tuesday, 18-May-2021இன்றைய தியானம்(Tamil) 18-05-2021
மின்கம்பியும் மைனாவும்
“நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” – யோவான் 17:16
விளையாடி விட்டு வீடு திரும்பிய ஜோயல் தன் வீட்டு மொட்டை மாடியின் அருகே செல்லும் மின்கம்பியின் மீது சில மைனாக்கள் உட்கார்ந்து ஒலியெழுப்பியதை ரசித்துக்கொண்டே அந்த மைனாவில் ஒன்றைப் பிடிப்பதற்காக கையை நீட்டினான். எதிர்பாராத விதமாக ஜோயலின் கை மின் கம்பியில் பட்டதால் அதிர்ச்சியில் சிறுவன் கீழே விழுந்தான். மைனாக்களோ ஒலி எழுப்பியபடியே பறந்து சென்று விட்டது. சிறுவன் ஜோயலுக்கோ கேள்வி எழுந்தது. மைனாக்கள் மின் கம்பியில் அமர்ந்திருக்கும்போது எதுவும் நேரிடவில்லையே? எனது கைகள் லேசாகப் பட்டவுடனே மின் கம்பியின் அதிர்வை நான் உணர்ந்தேனே இது எப்படி? என்று குழம்பியபடி தன் தாயிடம் இந்த கேள்வியை கேட்டான். அதற்கு அவனது அம்மா, “மைனாக்கள் மின் கம்பியில் அமர்ந்திருக்கும் போது உலகத்தோடு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நீ உன் கையால் மின் கம்பியைத் தொடும்போது உன் கால்கள் பூமியோடு தொடர்பில் இருப்பதால் மின் கம்பியின் அதிர்வை உணர்ந்தாய்” என்று கூறினார்கள்.
ஆம், இந்த மைனாக்கள் பூமியில் இருந்தாலும் பூமியோடு தொடர்பில்லாததால் ஒரு எளிய, பாதுகாப்பான கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ச்சியாய் சுற்றித்திரிகிறது. நாமும் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறோம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? நாம் உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்திற்குரியவர்கள் அல்ல என்று வேதம் கூறுகிறது. அதாவது கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய உலகத்தில் உண்டான இவைகளின் மேல் நாட்டமும் ஆசையும் கொள்ளும் மனிதனின் ஆத்துமா இவ்வுலகத்தால் கறைபட்டு விடுகிறது. உதாரணமாக ஏவாள் தன் கண்களினால் பழத்தை இச்சித்தாள், அதை ருசிபார்க்க வேண்டுமென்ற மாம்ச இச்சை மேலோங்கியது. எதற்காக? தேவர்களைப் போல மாற வேண்டுமென்ற ஜீவனத்தின் பெருமையால் அல்லவா? ஆனால் இயேசுகிறிஸ்து வனாந்தரத்திலே பிசாசினால் சோதிக்கப்படும்போது இந்த மூன்று காரியங்களையும் ஜெயித்தார்.
அன்பானவர்களே! நான் உலகத்தானல்லாதது போல நீங்களும் உலகத்தாரல்ல என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தைகளை எப்போதும் நினவிற்கொள்வோம். நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் உலகத்தார் செய்யும் செயலோ அவர்களின் வாழ்க்கை முறையோ, நம்மை ஈர்க்கவோ, நம்மை அசைக்கவோ இடம் கொடுக்கக்கூடாது. மேலும் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் என்றும் வேதம் சொல்கிறது. ஆம், நாம் உலகத்திலிருந்தாலும் நம்முடைய வாழ்க்கை உலகத்தை பிரியப்படுத்துகிறதாயிராமல், தேவனைப் பிரியப்படுத்துகிறதாய் இருக்கட்டும். அப்படிப்பட்ட வாழ்வு வாழ ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
- Mrs. ஜாஸ்மின் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
Peace Centre க்கான Chapel கட்டுவதற்கு எடுக்கிற முயற்சிகளை தேவன் ஆசீர்வதித்து தர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250