By Village Missionary Movement
Thursday, 10-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 10.04.2025
கோபம்
"...கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;" - யாக்கோபு1:19
முத்தம்மாள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவளாக வாழ்ந்து வந்தார். தனது விருப்பத்திற்கு மாறாக என்ன நடந்தாலும், யாரைப் பார்த்தாலும், அவரது கோபமே வெளிப்படும். ஏன் சிறு பிள்ளைகளும் கூட இவரிடம் தப்பிக்க முடியாது. ஒரு நாள் முத்தம்மாளின் அம்மா இவரை பார்க்க வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் வர சற்று கால தாமதமானது. தனது தாயிடம் கூட கோபத்தை விட்டுவைக்க வில்லையாம். முத்தம்மாளின் கோபம் அவரை ஒருநாள் மிகுந்த பெலவீனத்திற்கு உள்ளாக்கியது. டாக்டரை சந்திக்க அழைத்துச் சென்றனர். டாக்டர் கூறினார், ஒரு நாள் முழுவதும் நீங்கள் கோபப்படாமல் யாரிடமும் பேசாமல் இருந்தால் ஒருவருடம் உங்களுடைய ஆயுள் வருஷம் கூடும் என்று. மேலும் உங்கள் வியாதிக்கான மருந்து நீங்கள் கோபப்படாமல் அமைதியாயிருப்பதே என்றார். அன்று முதல் முத்தம்மாள் தனது கோபத்தை படிப்படியாய் குறைத்து அதை தேவகிருபையால் விட்டுவிட்டார். கோபக்காரி என்கிற பட்டமும் அவரை விட்டு விலகிச் சென்றது.
பழைய ஏற்பாட்டில் மோசே என்ற தலைவரை நாம் அறிவோம். இந்த மோசே யார் என்றால் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் சென்றவர். இந்த மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார். இப்படிப்பட்டதான மோசேயை இஸ்ரவேல் ஜனங்கள் கோபப்படுத்துவது வழக்கமான ஒன்று.
வனாந்தரத்தில் வழிநடத்திச் செல்லும்போது அவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போனது. அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் கேட்ட பொழுது கன்மலையைப் பார்த்து பேசுங்கள். அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும் என்று சொன்னார். ஆனால் மோசே, மாறாக தன் கையை ஓங்கி கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தார். இதினிமித்தமாக மோசே கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போனது.
பிரியமானவர்களே! கோபத்தை பற்றி வேதத்தில் அநேக எச்சரிப்பு வசனங்கள் உண்டு. கோபம் பொல்லாதது, அது பகையை வளர்க்கக்கூடியது. இன்று அநேக உறவுகளில் பிரிவினைக்கும், விரிசல்களுக்கும் காரணம் முன்கோபம். இந்த கோபமானது குடும்பத்தையே சில நேரங்களில் இரண்டாக பிரித்து விடும் தன்மைக்கொண்டது. நாம் கோபத்தை அடக்குவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இது நம்முடைய சுய முயற்சியினால் முடியாது. கோபத்தை அடக்குவதற்கு ஆண்டவருடைய உதவியை 100% சார்ந்துகொள்வோம். கோபத்தினால் நன்மையையும், வாழ்க்கையையும் இழந்த அநேகரை நாம் கண்கூடாக பார்க்கலாம். எனவே தான் நாம் இப்படியாக வாசிக்கிறோம். கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்கக்கடவர்கள் என்று. நாம் ஒருவர் மீது கோபப்படும் போது நம்மை உண்டாக்கின தேவன் மீது கோபப்படுவதற்கு சமமாம். எனவே கோபத்தை விட்டு விட முயற்சிப்போமா!
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:-
மீடியா ஊழியத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்க தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864