By Village Missionary Movement
Wednesday, 09-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 09.04.2025
இரட்சிப்பை ஸ்திரப்படுத்து
"நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை" - வெளி. 3:2
சமீபநாட்களில் எனக்கு தெரிந்த ஒரு வாலிபப் பிள்ளையை சந்திக்க நேர்ந்தது. மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், அவளுடைய பேச்சுக்கள் அனைத்தும் பரிசுத்தமாகவும், பக்திமயமாகவுமே இருந்தது. தான் பெற்றுக் கொண்ட இரட்சிப்பில் இவ்வளவு உறுதியாய் இருக்கிறாளே என்று தேவனைத் துதித்தேன். ஓரிரு நாட்களில் இப்பிள்ளையின் தாயார் என்னிடம், தன் பிள்ளையின் விடுதலைக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டார்கள். "கடந்த ஒரு வருடமாகவே இவள் வீட்டில் யாருடனும் சரியாகப் பேசுவதில்லை, முழு நேரமும் Phone ம் கையுமாக படிப்பில் கவனம் இல்லை, தாய் தகப்பனை மிரட்டுவது, அவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, எதற்கெடுத்தாலும் தாய் தகப்பனையே குற்றம் சாட்டுவது, தோழிகளுடன் ஊர் சுற்றுவது, வேதம் வாசிப்பதும் இல்லை, ஜெபிப்பதும் இல்லை. ஆனால் Key board தான், guitar தான், choirமெம்பர் தான் - தேவனுக்கும் இவளுக்கும் சம்பந்தமில்லை" என்று இன்னும் பலவாறு சொல்லி அழுதார்கள். அப்போது எனக்கு ஒரு வேத வசனம் ஞாபகத்திற்கு வந்தது. "... நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்." வெளி 3:1. வெளியே பார்ப்பதற்கு இரட்சிக்கப்பட்டவள்; தேவனுடைய பிள்ளை; ஆவிக்குரியவள்; அதாவது உயிருள்ளவள். ஆனால் உள்ளான வாழ்வோ செத்துப் போன நிலைதான். ஆவிக்குரிய ஜீவன் இல்லை. இப்படித்தான் இந்தக் கடைசி நாட்களில் ஆயிரம் ஆயிரமான ஜனங்கள் இருக்கிறார்கள். ஆராதனைகளும், ஆட்டம் பாட்டங்களும், fastingம், feast ம் பஞ்சமே இல்லை. வெளியே பசுமையான மரம் போல காட்சி. உள்ளேயோ உயிரற்ற காய்ந்த மரம் போல காணப்படுகிறார்கள்.
இதை வாசிக்கும் தேவ ஜனமே! கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியங்களில் சிக்கிக் கொண்டு, ஜெபவாழ்வை இழந்து, பக்திமானாய் வேஷம் போட்டு ஆலயத்திலும், Office லும் வலம் வருகிறோமே! நாம் விழித்துக் கொள்ளும் வேளை வந்து விட்டது. முன்பு கர்த்தருக்குள் உயிரோட்டம் உள்ளவர்களாய் காரியங்களை நடப்பித்தோம் என்று சிந்தித்து, எந்தெந்தக் காரியங்களில் நம் ஆவிக்குரிய வாழ்வு செத்துவிட்டது என சீர்தூக்கிப் பார்த்து, அதை மீண்டும் ஸ்திரப்படுத்தும்படி, செப்பனிடும்படி, புதுப்பித்து மனந்திரும்பும்படி தேவன் நம்மை எச்சரிக்கிறார். நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, அழுது, இரட்சிப்பை தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டோமே, அந்த வகையை நினைவுகூர்ந்து, இரட்சிப்பைக் கைக்கொண்டு மனந்திரும்புதலுக்கேற்ற கனியைக் கொடுக்க விழித்துக் கொள்வோம்.
இரட்சிப்பின் வஸ்திரத்தை அசுசி (அழுக்கு) படுத்தாதவர்களை தேவன் கனப்படுத்தி, வெண்வஸ்திரம் கொடுக்கிறார். ஜீவ புத்தகத்தில் பெயர் கிறுக்கப்படாது. பரலோகில் இவர்கள் பெயர் இயேசுவால் அறிக்கை செய்யப்படும். நாமும் நம் வாழ்வை மீண்டும் செப்பனிட்டால் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவர்களாகக் காணப்படுவோம். God Bless You!
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:-
நன்கு படித்த திறமையான ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864