By Village Missionary Movement
Tuesday, 01-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 01.04.2025
உடன் பயணிக்கும் கர்த்தர்
"…நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்" - ஆதியாகமம் 31:3
ஒரு முறை ஊழியத்தின் தேவைகள் மற்றும் நெருக்கத்தினிமித்தம் சோர்வுற்று இருந்தேன். இனி புதிய திட்டங்கள் ஒன்றையும் செயல்படுத்தக் கூடாது என்றிருந்தேன். அப்போது தேவன் என்னோடு பேசினார். யவீரு என்னும் ஜெப ஆலயத் தலைவன் தன் ஒரு மகளுக்காக வேண்டிக் கொண்ட போது நான் அவனோடு பயணித்து, அவன் குறைவை நிறைவாக்கினேன், தேவையை சந்தித்தேன். நீ ஆயிரக்கணக்கான வாலிபர்களுக்காக வேண்டிக் கொள்ளும் போது நான் உன்னோடு பயணிக்க மாட்டேனா? உன் தேவையை சந்திக்க மாட்டேனா? என்றார். உடனே என் சோர்வு நீங்கி உற்சாகமடைந்தேன்.
மாற்கு 5 ம் அதிகாரத்தில் ஜெப ஆலயத் தலைவர் யவீரு, இயேசுவிடம் வந்து தன் மகள் மரண அவஸ்தை படுவதாகவும், நீர் வந்து உம் கைகளை அவள் மேல் வையும், அப்பொழுது பிழைப்பாள் எனவும், தன் மகளுக்காக வேண்டுகிறார். உடனே இயேசு கிறிஸ்து யவீருவுடன் செல்ல சம்மதிக்கிறார்.போகிற வழியில் பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு அற்புதத்தை செய்கிறார், சற்று நேரம் பிரயாணம் தடைபடுகிறது. ஆனாலும் யவீரு இயேசுகிறிஸ்து என்னுடன் தான் வருகிறார். சொன்னதை செய்வார் என உறுதியில் தைரியமாய் இருக்கிறார். பயணம் தாமதிக்கையில் மகள் மரித்த செய்தி வருகிறது. அப்போது இயேசு யவீருவைப் பார்த்து விசுவாசமுள்ளவனாயிரு என சொல்லி யவீருவின் வீட்டிற்கு செல்கிறார். மகளை உயிரோடே எழுப்புகிறார்.
இன்று உலகில் நம்மோடு யார் பயணிப்பார்? நம்மை யார் நம்புவார்கள்? ஆனால் இயேசு நம்மோடு பயணிக்க ஆவலாயுள்ளார். அவர் நம்மோடு பயணிக்கும் போது பொறுமை, அன்பு, பிறரை நேசித்தல் உண்டாகும். நம் காரியங்களை விட பிறரது காரியங்கள் மீது அக்கறை உண்டாகும். மேலும் நம்முடைய விசுவாசம் கூடும். யவீரு இயேசுவுடன் பயணித்த சில மணி நேரத்தில் இவையெல்லாம் யவீருவுக்குள் வந்துவிட்டது. இன்றும் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் நமக்கு இயேசுவோடு கூட பயணிக்கும் அனுபவம் உண்டா? இயேசுவோடு கூட உங்கள் வாழ்க்கை பயணத்தில் சென்று கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் கண்களுக்கு முன்பாக பிறரது குறைவு, தேவை தெரிகிறதா? யவீரு பெரும்பாடுள்ள ஸ்திரீயின் தேவையறிந்து பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறார். பிறருக்காக பிறரின் தேவைக்காக தேவனின் பாதத்தில் ஜெபியுங்கள்.
பிரியமானவர்களே! எங்களது ஊழியத்திலும் கிராமங்களில் உள்ள சிறுவர்கள், வாலிபர்கள் மீட்படைய பணி செய்யும் ஊழியர்களுக்காக ஜெபிக்கும் ஜெபகுழுக்கள் தேவை. நீங்கள் உங்களோடு ஒருவரையோ, இரண்டு பேராகவோ இணைந்து ஜெபிக்கலாம். தன் மகளுக்காக வேண்டிக் கொண்ட யவீருவோடு பயணித்த கர்த்தர், அநேக வாலிபர்களுக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்கும் போது உங்களோடும் பயணித்து உங்கள் தேவைகளை சந்திப்பார். நீங்கள் அவ்வாறு ஜெபிக்க விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Bro. K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களில் கர்த்தரின் கரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864