By Village Missionary Movement
Monday, 31-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 31.03.2025
பெலவீனம் கீழ்ப்படிய தடையில்லை
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" - பிலிப்பியர் 4:13
மோசே, ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய தன்னுடைய சரீர பிரகாரமான பெலவீனம் ஒரு தடை என்று எண்ணுகிறார். இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படியாக மோசேயை ஆண்டவர் அழைத்தபோது மோசே கர்த்தரை நோக்கி ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால் நீ போ, நான் உன் வாயோடே இருந்து நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத்திராகமம் 4:10-12ல் இவ்வாறாக ஆண்டவர் மோசேயைத் தைரியப்படுத்தி தன் பணி செய்ய அனுப்புகிறார்.
ஆஸ்வால்ட் ஜெ. ஸ்மித் என்கிற தேவஊழியர் தன் சிறுவயதில் மிகவும் பலவீனமாக இருந்தார். அந்தப் பட்டணத்தில் எந்த வியாதி வந்தாலும் முதலாவது ஆஸ்வால்ட்க்கு தான் வரும் அதன் பிறகு தான் மற்றவர்களுக்கு வரும். அவ்வளவு எதிர்ப்பு சக்தியற்ற பெலவீனமான சிறுவன். ஆஸ்வால்ட் தன்னை கர்த்தருடைய ஊழியத்திற்கென்று முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் அவருடைய பெலவீனத்தைப் பாராதபடி அவருடைய ஒப்புக் கொடுத்தலையேப் பார்த்தார். அதனால் கர்த்தர் ஸ்மித்தை மிகவும் வல்லமையாக பயன்படுத்தினார். அவரை கனடா தேசத்தில் டொராண்டோ பட்டணத்தில் உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட "பீப்பிள்ஸ் சர்ச்" என்ற ஆலயத்தை ஸ்தாபிக்க உதவி செய்தார். இது எதைக் காட்டுகிறது, நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். (எபிரேயர் 4:15)
பிரியமானவர்களே! நம்முடைய வாழ்வில் பிரச்சனைகளும், சோதனைகளும், பலவீனங்களும் நம்மை நெருக்குகையில் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்று தொடர்ந்து முன் செல்வோம். அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிவதின் மூலம் அவருடைய பெலத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய நம்முடைய பெலவீனம் ஒரு தடையே இல்லை.
"பெலனற்ற பாத்திரம் நானே பழுதடைந்தேனே
பலமுறை நானே உன் கரம் கொண்டென்னை வனையும்
உலகுக்கு உப்பாக மாற்றும்."
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
வடமாநில மிஷனெரிகளின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864