By Village Missionary Movement
Thursday, 27-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 27.03.2025
விசுவாசம் செப்பனிடப்பட
"விசுவாசத்தினாலே யாக்கோபு .... தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுது கொண்டான்" - எபிரெயர் 11:21
ஒரு அரசன் தன்னுடைய அரண்மனைக்கு ஒரு பிரதம மந்திரி தேவையென்று, அதற்கான சரியான ஒரு மனிதனை தேடினார். கடைசியில் மூன்று பேரை கண்டுபிடித்து, அவர்களில் யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்களோ, அந்த மனிதனை பிரதம மந்திரியாக்க தீர்மானித்தார். அதன்படி, ஒரு கதவில் ஒரு பெரிய பூட்டை உண்டு பண்ணி அதை மாட்டி, யார் முதலில் கதவை திறக்கிறார்களோ, அவர் பிரதம மந்திரி ஆவார் என்று அறிவித்தார். அதன்படி, மூவரும் அதை திறப்பதற்கு முயற்சித்தார்கள். அவர்களில் இருவர், தங்களுக்குத் தெரிந்த கணக்கு எல்லாம் போட்டு பார்த்து, எப்படி திறப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னொருவர் பூட்டை எப்படி உடைப்பது என்று குழம்பிக்கொண்டிருந்தார். சற்றுநேரத்தில் ராஜா போய் அந்தக் கதவின் கைப்பிடியை தொட்டார். உடனே கதவு திறந்து கொண்டது. அந்தக் கதவு பூட்டப்படவே இல்லை.
இதைப் போலவே வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. யாக்கோபுக்கு 12 குமாரர்கள். அவர்களில் ஒருவர் தான் யோசேப்பு. இந்த யோசேப்பு அவன் உடன்பிறந்த சகோதரர்களால் விற்கப்பட்டான். ஆனால் யாக்கோபுக்கு இது தெரியாது. என் மகன் யோசேப்பு மரித்துப்போயிருப்பான், இல்லையென்றால் ஏதோ ஒரு மிருகத்தினால் பீறுண்டு போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் கர்த்தர் யாக்கோபின் விசுவாசத்தை புடமிட்டார். யாக்கோபின் விசுவாசமே யோசேப்பு உயிரோடு இருப்பதையும், அவன் எகிப்து தேசத்திற்கெல்லாம் அதிபதியாய் இருப்பதையும் காணச் செய்தது. எல்லாம் முடிந்தது, மரித்துப்போன சூழ்நிலையில் கர்த்தர் யாக்கோபின் விசுவாசத்தை செப்பனிட்டார்.
இதை வாசிக்கின்ற அன்பானவர்களே! நம்முடைய விசுவாசம் பல நேரங்களில் நமக்கு தெரியாமலே ஆண்டவரால் செப்பனிடப்படுகிறது. ஆனால் ஒன்றை மாத்திரம் அறிந்து கொள்வது நல்லது. செப்பனிடப்படுவது என்பது நம்மை ஆவிக்குரிய வாழ்வில் அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்வது. இந்நாளிலும் தேவன் நமக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அதை திறக்கக்கூடாதபடிக்கு, நமக்குள் பயம், அவிசுவாசம், அறியாமை, பெருமை போன்ற அநேக பூட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் அது பூட்டப்படாமல் இருக்கிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். விசுவாசத்தோடு நாம் அதைப் போய் திறந்தால் வெற்றி, நல்ல நிலைமை, நல்ல சந்தர்ப்பங்கள் என்று அநேக காரியங்கள் காத்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையிலும் பூட்டப்பட்ட கதவுகள் இருக்கின்றனவா? விசுவாசத்தோடு திறவுங்கள்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864