By Village Missionary Movement
Sunday, 23-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 23.03.2025
எலியும் அதின் நண்பர்களும்
"ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்" - கலாத்தியர் 6:2
மே... மே... என்று ஆடுகள் சத்தம் போட, மற்றொரு பக்கம் கொக்... கொக்... என்று கோழிகள் சத்தம் போட, கீச்.... கீச்.... என்று எலி வீட்டை சுற்றி சுற்றி வர, இப்படி எல்லோரும் நண்பர்களாய் இருந்தார்கள். ஒருநாள் வீட்டு எஜமான் வெளியிலிருந்து கையில் எலிப்பொறியுடன் வருவதைக் கண்ட எலி திடுக்கிட்டது. நேரே வீட்டிற்குள் சென்ற எஜமான் தனது மனைவியிடம் நம் வீட்டிற்குள் அநேக நாட்களாக சுற்றி வருகிற எலியை இன்று தீர்த்துக் கட்டிட வேண்டியதான் என்றார். இதைக் கேட்ட எலிக்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது.
எலி துக்கத்துடன் தனது நண்பர்களிடம் ஆலோசனைக்காகவும், ஆறுதலுக்காகவும் சென்றது. முதலில் கோழியிடம் சென்று நடந்ததை சொல்லி அழுதது. உடனே கோழி எனக்கும் எலிபொறிக்கும் சம்பந்தமே இல்லை. அது உனக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்றது. ஏமாற்றத்துடன் எலி வான்கோழியிடம் சென்று விஷயத்தைச் சொன்னது. வான்கோழி கட கட வென சிரித்தது. அப்போ இதுதான் உனக்கு கடைசி நாளா என்று பரியாசம் பண்ணியது. எலி மிகுந்த மனவேதனையுடன் ஆடு கிட்டே போய் சொன்னது. உடனே ஆடு கசாப் கடையிலிருந்து ஆள் வந்தாதான் எனக்கு கவலை, இது உன் கவலை அதை என்னிடம் சொல்லாதே என்று அலட்சியமாகப் பேசியது. எலி மிகுந்த மனவேதனையுடன் சிந்தித்தது. இனிமேல் நான் இருக்கும் இடத்தை விட்டு எலிப் பொறி பக்கமே போகக்கூடாது என முடிவு பண்ணியது. இரவில் வீட்டு எஜமான் எலிப் பொறியில் கருவாட்டை மாட்டி வைத்தார். எலி அதைப் பார்த்து விட்டது. பிறகு எல்லோரும் தூங்கிய கொஞ்ச நேரத்திற்குள் ஒரு சத்தம். எலிப் பொறியில் தனக்கு பதிலாக யாரோ மாட்டி விட்டார்கள் என்று பார்க்க வந்த எலிக்கு ஒரே அதிர்ச்சி, மற்றொரு பக்கம் மகிழ்ச்சி. ஏனென்றால் நீண்ட நாட்களாக தன்னை சாப்பிட வந்த பாம்பு எப்படியோ பொறியில் மாட்டி இருந்தது. இதை அறியாத எஜமாட்டி வேகமாக வந்து எலி மாட்டி விட்டது என்று எலிபொறியை தூக்க, மாட்டியிருந்த பாம்பு கடித்து விட்டது. எஜமானி ஓ.. என்று சத்தம் போட எஜமான் வேகமாக வந்து எஜமாட்டியை அழைத்து Hospital சென்றார். அவர்களை check பண்ணின டாக்டர் நல்லவேளை தலைக்கு விஷம் ஏறுவதற்குள் கொண்டு வந்தீர்கள் என்று ஆறுதல்படுத்தி விஷம் இரத்தத்தில் கலந்து உள்ளது, இரண்டு நாட்கள் இங்கே இருக்கட்டும் என்றார்.
அப்பொழுது அங்கே அவரைப் பார்க்க வந்த ஒருவர், உடம்பு தேறுவதற்கு கோழி சூப் வைத்து சாப்பிடுங்கள் என்றார். வீட்டிற்கு வந்ததும் எஜமான் கோழியை அடித்து சூப் வைத்துக் கொடுத்தார். பின்பு வீட்டிற்கு அவரைப் பார்க்க வந்த உறவினர்களுக்கு வான்கோழி அடித்து விருந்து வைத்து அனுப்பினார். இப்போது எஜமானி பூரணசுகம் அடைந்ததால் ஊருக்கே விருந்து வைக்க நினைத்த எஜமான் தன் வீட்டில் வளர்த்த ஆட்டை அறுத்து விருந்து வைத்து மகிழ்ந்தான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எலி சந்தோஷப்படாமல் சிந்தித்தது. எக்காரணம் கொண்டும் சுயநலவாதியாக இருந்துவிடக் கூடாது. மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தது.
என்ன குட்டீஸ்! நீங்களும் மற்றவர்கள் படுகிற பாடு கஷ்டங்களைக் கண்டு பரியாசம் பண்ணாமல், உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தனும் O.k. வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864