By Village Missionary Movement
Wednesday, 19-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 19.03.2025
விலைக்கிரயம்
"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே;..." - 1 கொரி. 6:20
தென்னிந்தியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்ட பாஸ்டர் பவுலோஸ், சுவிசேஷ ஊழியத்திற்கு கப்பல் மூலமாக குவைத் சென்றார். ஆனாலும் சொந்த தேசத்தில் இரட்சிக்கப்படாத தன் ஜனங்களுக்காகவே இருதயம் இயங்கிக் கொண்டிருந்தது. திரைப்படத்தின் மூலம் இயேசுதான் வாழ்வு எனக் காட்டி இரட்சிப்பை சொல்லலாம் என்று நினைத்தார். Projector வாங்க பணம் இல்லாததினால் தன் இரத்தத்தை விற்று ஸ்லைடு புரொஜெக்டரை வாங்கினார். தன் பெலவீனத்தையும் பொருட்படுத்தாது தீவிரமாக ஊழியத்தில் செயல்பட்டார். விலைக்கிரயமின்றி ஊழியத்தை செய்ய முடியாது என்று அவர் அடிக்கடி கூறுவார்.
அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலும் யூதர்கள் வந்து சுவிசேஷம் சொல்லாதபடி பவுலை கல்லெறிந்து, அவன் மரித்துப் போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியே இழுத்துக் கொண்டு போனார்கள். ஆனாலும் காயம், இரத்தத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் பட்டணத்திற்கு சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்தார். இந்த உலகத்தில் நாம் எதையும் விலையில்லாமல் பெற முடியாது. இலவசமாய் ஒரு பொருள் கிடைத்தாலும் நிச்சயம் அதற்கு வேறு ஒருவர் விலைக்கிரயம் செலுத்தி இருப்பர். இரட்சிப்பு இலவசம் என்றாலும் அது கர்த்தராகிய இயேசு தன்னுடைய சொந்த இரத்தத்தைக் கிரயமாக செலுத்தித்தான் நமக்கு இரட்சிப்பைத் தந்தருளியிருக்கிறார். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள், பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. (கொலோ 1 : 20) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆம், பிரியமானவர்களே! நம்மால் முடிந்தவரை நாம் ஆண்டவரின் சத்தியத்தை எல்லா மனிதருக்கும் கூற கடமைப்பட்டிருக்கிறோம். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." (1தீமோ. 2:4) எனவே ஆண்டவரின் சித்தத்தை நாம் செய்ய நம்மை முழு மனதோடு அர்ப்பணிப்போம். நாமும் ஆத்துமா ஆதாயம் செய்ய நம்முடைய நேரம், பணம், உடைமை, உழைப்பு போன்றவற்றை கிரயமாக செலுத்த கடனாளியாயிருக்கிறோம். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது;.." (1தீமோ 1:15)
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு;-
அற்புதமாலை கூட்டங்களில் கலந்து கொள்கிறவர்கள் அற்புதத்தை சுதந்தரிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864