By Village Missionary Movement
Saturday, 01-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 01.03.2025
முதல் அடி
"...கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்" - யோசுவா 3:13
மோசேயை அடுத்து யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் பொறுப்பெடுக்கிறார். முன்னே யோர்தான் அறுப்புக் காலத்தில் அதிகமாய் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. தேவனின் பாதத்தில் காத்திருந்த யோசுவாவிடம் தேவன் சொல்கிறார், கர்த்தரின் பெட்டியை சுமக்கிற ஆசாரியரின் உள்ளங்கால்பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றார். முதல் அடி யோர்தானின் நீரில் வைக்க வேண்டும். அப்போது தான் அது நின்று வழி விடும் என்றார். முதல் அடி நாம் எடுத்து வைக்கும் போது தேவன் நம் உடனிருந்து காரியத்தை வாய்க்கச் செய்வார். காரியத்தை நடப்பிக்கிறவர் தேவனே. ஆனால் முதல் அடி நாம் எடுத்து வைக்க வேண்டும். இதற்கு தைரியமும், தேவன் மேல் விசுவாசமும் இருந்தால்தான் முதல் அடி எடுத்து வைக்க முடியும். கரைபுரண்டோடும் தண்ணீர் ஒரு பக்கம், உடன்படிக்கை பெட்டி ஒரு பக்கம், ஒரு வித பயம் அவர்கள் இருதயத்தில் இருந்திருக்கும். ஆனால் தேவன் உள்ளங்கால் தண்ணீரில் பட வேண்டும் என்றார். கர்த்தர் மேல் விசுவாசமும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே நாம் முதல் அடி எடுத்து வைக்க முடியும். நம் தேவன் பெரியவர், அதிசயங்களைச் செய்கிறவர். ஆனால் நாம் செயல்பட்டால்தான் அவர் நம்மோடு இணைந்து செயல்பட்டு, பெரிய காரியங்களை நம்மூலம் செய்வார். ஆகவே நம் வாழ்க்கையில் கர்த்தர் சொல்லும் காரியத்தில் நாம் முதல் அடி எடுத்து வைக்கத் தயங்க வேண்டியதில்லை. கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டு முதல் அடி வைப்போம். தேவன் நமக்குள்ளிருந்து செயல்படுவார்.
பிரியமானவர்களே! தாவீது ஆடுகளை சிங்கத்திடமிருந்து, கரடியிடமிருந்து காப்பாற்றியபோது கோலியாத்தை வீழ்த்துவோமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. கோலியாத்தின் ஆரவாரத்தைக் கேட்ட போது அதுவே தைரியத்தைத் தந்தது. அதே போல உங்கள் வாழ்வில், வேலையில், படிப்பில் முதல் அடி எடுத்து வைக்கத் தயக்கத்தோடு இருக்கிறீர்களா? தயங்காதீர்கள். கர்த்தர் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இருப்பார். ஆதலால் தயங்காமல், விசுவாசத்தோடு முதல் அடி எடுத்து வையுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தில் தேவனே ஜெயத்தைத் தருவார். காலங்கள், சூழ்நிலைகள் உங்கள் திறமைகள் இவற்றை பார்த்து தயங்காமல் முதல் அடி எடுத்து வையுங்கள். சர்வ வல்லவர் உங்களோடுண்டு. காரியங்களை வாய்க்கச் செய்கிறவர் கர்த்தரல்லவா? முதல் அடி எடுத்து வையுங்கள், ஜெயத்தை சுதந்தரியுங்கள்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864