By Village Missionary Movement
Friday, 14-May-2021இன்றைய தியானம்(Tamil) 14-05-2021
பாவத்தின் பயங்கரம்
“பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” – யாக்கோபு 1:15
ஒரு வாலிப பெண்ணிடமிருந்து ஒரு தேவ ஊழியருக்கு போன் வந்தது. அவள் இவ்வாறாக சொல்ல ஆரம்பித்தாள், “நான் உங்களது தேவ செய்தியை விரும்பி டிவியில் பார்ப்பேன். ஆனால் இப்பொழுது உங்களது செய்தியை பார்க்க விருப்பமில்லை. என் இருதயத்தில் சமாதானம் இல்லை, என் இருதயம் கல்லாகிப் போனது. ஒரு இரக்கமே இல்லாத இருதயம் போலாகிவிட்டது. எனது தாயாரை உதைத்து கீழே தள்ளிவிட்டேன். அவர்கள் இப்பொழுது நடக்க முடியாமல் இருக்கிறார்கள். கொஞ்ச நாட்களாக என்னை எனக்கே பிடிக்கவில்லை. ஐயா, நான் இப்பொழுது பெரிய பாவியாக மாறிப் போனேன்” என்றாள். “என்ன காரணம்?” என்று ஊழியக்காரர் கேட்டபோது, “நான் இப்பொழுது சமூக வலைதளத்திற்கு அடிமையாகிவிட்டேன். ஒரு நாள் பேஸ்புக்கில் புதிதாக ஒரு அக்கவுண்டை ஆரம்பித்து, பலரது அழைப்பை ஏற்றேன். என்னுடைய வாழ்க்கையே திசை திரும்பியது. அதற்கு மட்டும் நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். பைபிள் வாசிக்கவோ, ஜெபிக்கவோ விருப்பமில்லை. உங்களது செய்தியை கூட இப்போது பார்ப்பதில்லை. என்னுடைய தாயார் என்னிடத்திலே ஏன் இப்படி மாறிவிட்டாய் என்று கேட்டதற்கு தான் அவர்களை ஓங்கி எட்டி உதைத்தேன். அவர்களுக்கு இடுப்பிலே நடக்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அழுது கொண்டே “நீ ஏன் ஜெபம் பண்ணவில்லை, வேதம் வாசிக்கவில்லை” என்று தான் திரும்ப திரும்ப கேட்டார்கள். அவர்கள் வேதனையை பார்த்து எனக்கு அழுகையும் வரவில்லை என் இருதயமும் கல்லாய் போனது. நான் இப்படி மாறிவிட்டேனே என்று என்னை குறித்து வேதனைப்படுகிறேன். ஐயா தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்” என்று சொன்னாள்.
இயேசு கிறிஸ்துவின் சீடராகிய யூதாஸ்காரியோத்துக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் பண ஆசை வந்து கடைசியில் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுக்கும் அளவிற்கு அவனுடைய பாவம் வளர்ந்துவிட்டது. அவனுடைய இருதயம் கடினப்பட்டு கல்லாய் மாறிவிட்டது. அன்பான வாலிப தம்பி-தங்கச்சி உன் வாழ்க்கையின் நிலை என்ன? இதிலென்ன இருக்கிறது என்று விளையாட்டாக phone ல் ஒரு மெசேஜ், ஒரு சிறிய தொடர்பு, உன் சிந்தையை, உன் எதிர்கால இலட்சியத்தையே திசை திருப்பி விடும் என்பதை மறவாதே! சின்ன பாவம்தானே என்று ஆரம்பித்து இன்டர்நெட் கேம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், பேஸ்புக், சாட், எதிர்பாலர் நட்பு, இதெல்லாம் ஒன்றும் பாவம் இல்லை என்றுதான் நினைப்போம். இதில் என்ன பாவம் இருக்கிறது? என்று அசட்டையாக நினைத்து இந்த பாவத்திலே சிக்கிவிடுகிறோம். சிலர் தற்கொலைக்கு நேராகப் போகிறார்கள். ஆதியாகமம் 4:7ல் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் என்று வேதம் சொல்லுகிறது. அந்த வலையில் மாட்டிக் கொள்ளும்போது திரும்ப எழுந்திருக்க முடியாதபடி விழுந்து விடுகிறோம். எனவே தினமும் ஜெபித்து வேதத்தை தியானிக்க தீர்மானிப்போம். தேவன்தாமே நம் ஒவ்வொருவரையும் எவ்வித மாய வலையிலும் சிக்கிக் கொள்ளாதபடி காப்பாராக.
- P.V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
மே மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் மிஷனெரிகளின் பிள்ளைகளுக்கென நடைபெறும் யோசுவா முகாமில் அநேக மிஷனெரிகளின் பிள்ளைகள் கலந்து கொள்ள ஜெபியுங்கள்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250