By Village Missionary Movement
Thursday, 27-Feb-2025இன்றைய தியானம்(Tamil) 27.02.2025
வேதாகமத்தில் மான்
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" - சங்கீதம் 42:1-2
கர்த்தர் ஜாதி ஜாதியான நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும், சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சகலவித பட்சிகளையும் படைத்தார். யோபு 12: 7 ல் "இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்" என வேதத்திலுள்ள விலங்குகள், பறவைகளை நம் வாழ்வுடன் ஒப்பிட்டு சிந்தித்துப் பார்க்க யோபு சொல்லுகிறார். அவைகள் நமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்கின்றன.
இப்பொழுதும் மானைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம். பொதுவாக மான்களில் 60க்கு மேற்பட்டவைகள் உள்ளன என விலங்கியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கரடுமுரடான மலைகளிலும், உயரமான இடங்களிலும் மிகவும் வேகமாக அதாவது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் கலைமான் ஓடக்கூடியதாம். 2 சாமு 2 :18 ல் ஆசகேல் கலைமானைப் போல வேகமாய் ஓடுகிறவன் என எழுதப்பட்டுள்ளது. தாவீதும் எல்லாச் சத்துருக்கள் கைக்கும், சவுலின் கைக்கும், தப்புவித்த போது "அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்" என 2சாமு. 22:34 லும் மற்றும் சங்கீதம்18:33 லும் குறிப்பிடுகிறார். "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." ஆபகூக் 3:19. இந்த வசனம் ஆபகூக்கின் அசைக்கமுடியாத நம்பிக்கையை காட்டுகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை உடையவர்களாக நாமும் இருப்போமாக!
தாவீது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்கும் தனது ஜெப நேரத்தைக் குறித்து சிந்திக்கும் போது, அவரது மனத்திரையில் தண்ணீரைத் தேடி தாகமுள்ள மான் வாஞ்சித்து ஓடுவது போல் உணருகிறார். மானுக்குத் தாகம் ஏற்படும்போது காடுகளில் நீரோடைகளைத் தேடி, தவித்து, அலைந்து தன் தாகத்தைத் தீர்ப்பதுபோல, நம் ஆத்துமாவும் தேவன் மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும். தேவனோடுள்ள ஐக்கியம், வேத வாசிப்பு, இடைவிடாத ஜெபம் இவைகளிலே மிகுந்த தாகத்தை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்து பயன்படுத்துவாராக! எனக்கன்பானவர்களே! இப்படிப்பட்ட தாகம் நாளுக்கு நாள் நமக்குள் வளரட்டும் பணியாக வளரட்டும்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864