Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.02.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 26-Feb-2025

இன்றைய தியானம்(Tamil) 26.02.2025

 

கட்டுப்பாடற்ற காட்டுக்கழுதை

 

"காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்?..." - யோபு 39:5

 

நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கழுதை போன்றவை காட்டில் வாழும் சூழல் ஏற்பட்டால் அவற்றின் தன்மையே மாறிவிடுகிறது. இங்கே நாம் பார்ப்பது தன்னிச்சையாய் திரிகிற காட்டுக் கழுதை. யோபு 39: 5 - 8 வசனங்களில் அதுப்பற்றி அறிகிறோம். அவைகள் நம்மை அதிர வைக்கிறது. பாலை நிலத்தை தனக்கு வீடாகவும், யாருக்கும் பயனற்ற உவர்நிலத்தை தனக்கு உறைவிடமாக்கிக் கொள்கிறது. ஒரு வேளை ஊருக்குள் வருமாயின், நகரத்தின் இரைச்சல், போக்குவரத்து சிக்னல்கள் எதையும் மதிக்காது. இதை படிக்கும் போதே இரு சக்கர வாகனங்களில், கண், மண் தெரியாமல், சிக்னல்களை கூட ஏறிட்டும் பார்க்காத வாலிபப்பிள்ளைகள் நம் கண் முன் வருகிறார்கள் அல்லவா? ஆம், பல நேரங்களில் நாமும் கூட இப்படிப்பட்ட காட்டுக்கழுதைகள் போன்று, கட்டவிழ்க்கப்பட்டவர்கள் போல, கடவுளுக்கும் பயப்படுவதில்லை, மனிதரையும் மதிப்பதில்லை. கால் போன போக்கிலே நடக்கும் மனம் கொண்டவர்களாக செயல்படுகிறோம்.

 

குடும்ப உறவுகளில் உள்ள அன்பை தவற விடுகிறோம். பெரியோர் சொல்லைக்கேட்க மறுக்கிறோம். வாலிபர்கள் மட்டுமா? இல்லை, இல்லை நம் அனைவரும் தான். காரணம், நாம் யாருக்கும் கட்டுப்பட மறுக்கிறோம். சுய கட்டுப்பாட்டை இழந்து பல நேரங்களில் செயல்படுகிறோம். காட்டுக் கழுதைகள் வலிமை மிக்கவை, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆனால் நோக்கமற்ற ஓட்டம்! நாமும் கூட இதுபோன்ற வலிமை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால் திறமையும், சக்தியும், அறிவும், ஆற்றலும் நற்காரியங்களுக்காக பயன்படுகிறதா? குடும்ப நன்மைக்காகவும், சமூக மாற்றத்துக்குமான செயல்பாடுகளை கொண்டிருக்கிறோமா? என்னுடைய திறமை இறையரசு வளர்ச்சிக்கு உதவுகிறதா? 

 

அன்பு நண்பரே! நாம் காட்டு கழுதையைப் போன்று, யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று சற்றே யோசித்துப் பாருங்கள். "நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்." (1 கொரி 11:31). ஆண்டவர் நம் மீது இரக்கமுள்ளவராய் இருக்கிறார். "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." (சங்கீதம் 103 : 10) என்பதை மறந்து விடாதீர்கள். நாம் காட்டுக் கழுதைகளாக, வாழாதபடி இயேசுவை சுமக்கிற கழுதையாக வாழ முயற்சிப்போம்.

 

நாம் நம்மை ஆண்டவருடைய சமுகத்தில் தாழ்த்தி, நம்மை சீர்பொருந்தச் செய்யும்படி கடவுளுடைய கரங்களிலே நம்மை ஒப்படைப்போம். "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது." (சங்கீதம் 103:11)

- Rev. எலிசபெத்

 

ஜெபக்குறிப்பு:.

ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு லட்சம் வாலிபர்கள் பங்குபெறும் முகாம் நடத்தப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al