Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.02.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 25-Feb-2025

இன்றைய தியானம்(Tamil) 25.02.2025

 

அடைக்கலான் குருவி

 

"ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்" - மத். 10:31

 

உருவத்தில் மிகச் சிறியது, வலிமையான பறவையும் அல்ல; நின்று, வியந்து பார்க்கும் வண்ணம் கண்கவர் நிறமுடையதும் அல்ல. அதன் எடை 27 கிராமிலிருந்து 39 கிராம் வரை மட்டுமே! அதாவது ஒரு 50 கிராம் எடை கூட இல்லை. ஆனால் இந்த அற்பமான சிறிய அடைக்கலான் குருவி பற்றி இயேசு மத்தேயு 10 : 29 ல் கூறிய வார்த்தை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆம், "ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? (மிக, மிக, மலிவான விலை) ஆயினும், உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது" என்கிறார். விலை வேண்டுமானால் மலிவாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய பார்வையில் அவைகள் விலையேறப்பெற்றது. படைத்தவர் அதன் மீது கரிசனையாயிருக்கிறார். அவைகள் அவர் பார்வையில் அற்பமாக எண்ணப்படவில்லை என்பதே நாம் உணர வேண்டிய செய்தி!

      

 மத்தேயு 10: 31ல் "ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்" என்று வேதம் கூறுகிறது. ஒரு வேளை இதை வாசிக்கும் நீங்கள் கூட சமுதாயத்தில் பிறரால் அற்பமாய் எண்ணப்படும் தருணங்களில் சோர்ந்து போக வேண்டாம். "நீங்கள் விசேஷித்தவர்கள்" என்று நம்மை விட்டுக் கொடுக்காத ஒரு தேவன் இருக்கிறார். சங்கீதம் 84 :3 ல் அடைக்கலான் குருவி குறித்து தாவீது சொல்லுகின்ற போது உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே! என்று வியந்து போற்றுவதைக் காணலாம். ஆண்டவருடைய வாசஸ்தலத்தில் இந்த அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்தது.

       

இந்த குருவியைப் போலவே ஓய்வு நாளில் சிறுமைப்பட்ட ஜனம் இரக்கத்தையும், மனதுருக்கத்தையும் பெறும்படி இயேசு குருடர், செவிடர், சப்பானியர், முடவர், திமிர்வாதக்காரர் என பல்வேறு எளிமையானவர்க்கு ஆலயத்தில் ஓய்வு நாளில் சுகம் அளித்தார். அவருடைய வாசஸ்தலத்தில் சிறுமைப்பட்ட ஜனத்திற்கு சமாதானம் உண்டு என்பதை அறியலாமே! கர்த்தரின் ஆலயம் நித்திய மகிழ்ச்சி தரும் இடம். "இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை" என்று எழுதப்பட்டுள்ளது. அன்பானவர்களே! இந்த சிறிய குருவிகளை மறக்காத தேவன், அவைகளை விட விசேஷித்தவர்களாய் நம்மை நினைவுகூர்ந்து ஆசீர்வதிக்கிறவராய் இருப்பது நமக்கு கிடைத்த பெரும் பேறல்லவா! இந்த உலகத்தாரால், உறவுகளால் நாம் மறக்கப்பட்டு போனாலும், நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்று திருவுளம் பற்றுகிறார் நமது தேவன்.

     

பிரியமானவர்களே! நாம் அற்பமானவர்கள் அல்ல. கர்த்தர் பார்வையில் விசேஷித்தவர்கள். அவர் சித்தமில்லாமல் நாம் வீழ்ந்துவிடுவதில்லை. நாம் பயப்படத் தேவையில்லை. சிறிய அடைக்கலான் குருவி மேல் கரிசனையுள்ளவர் நம் மீதும் கரிசனைமிக்கவரே. "Yes, you are special"! மிகச்சிறிய அடைக்கலான் குருவி வாயிலாக நமக்கு கற்றுக்கொடுத்த போதனைகள் தான் எத்தனை! எத்தனை! உங்கள் மனம் பூரிப்பாகட்டும்.

- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்

 

ஜெபக்குறிப்பு:

பள்ளி விடுதி ஊழியங்கள் மூலம் நாம் சந்தித்த சிறுவர்கள் இயேசுவின் சந்ததிகளாய் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al