By Village Missionary Movement
Tuesday, 21-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 21.01.2025
பெரிய விசுவாசம்
"...உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது…" – மத்தேயு 15:28
1960 இல் ஒலிம்பிக் போட்டிகளில் இருபது வயதான பிலீமா ரொடால்ப் என்னும் கருப்பினப் பெண், அமெரிக்க தேசத்திலேயே முதன் முறையாக மூன்று தங்கப்பதக்கங்களை பெற்ற பெருமையை அடைந்தாள். 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களிலும் சாதனை செய்தாள். மிகவும் குறைந்த எடையோடு பிறந்த பிலீமா, பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு மரணத்தை எட்டும் நிலையில் துன்பப்பட்டாள். பிலீமாவின் தாய் தேவனை நேசித்து, மிகுந்த விசுவாசம் உடையவர்களாக இருந்தார்கள். ஜெபத்துடன் மகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். மருத்துவர்கள் அவளை உயிருடன் காப்பாற்றி விட்டார்கள். பிலீமாவின் முறிந்த கால்களை ஒன்றும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். தேவன் பேரில் விசுவாசமும், நம்பிக்கையும் கொண்ட அவளின் தாய், மகளுக்கு விசுவாசத்தை வளர்த்திருந்தார். மசாஜ் மூலம் குணமடைய வாய்ப்புள்ளது என்பதை அறிந்த தாய் ஒவ்வொரு வாரமும் 120 கி.மீ தூரம் சென்று சிகிச்சை பெறச் செய்தார். தேவனால் தன்னைக் குணப்படுத்த முடியும், தன்னாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற ஆர்வத்துடன் முயற்சி செய்தார். ஆறு மாதத்தில் காலூன்றி நிற்கவும், இரண்டு வருடங்களில் கோலூன்றி நடக்கவும் பழகினாள். சில வருடங்களிலே விசேஷித்த காலணிகளோடு தானாக நடக்கவும், ஓடவும் பழகிவிட்டாள். அன்று துவங்கிய ஓட்டத்தை உலக சாதனை படைக்கும் ஓட்டமாக மாற்றி ஜெயம் பெற்றாள். விசுவாசத்துடன் கூடிய விடாமுயற்சியோடு, குறைகளை நிறைவாக்கும் தேவனின் வல்லமையையும் தன் வாழ்வில் அனுபவித்தாள்.
நமது இன்றைய தியானப்பகுதியில் இயேசுவை சந்தித்த கானானிய பெண்மணி, தன் மகளின் கொடிய வேதனையை அவரால் குணமாக்க முடியும் என விசுவாசித்தாள். "இயேசுவே தாவீதின் குமாரன்" என ஏற்றுக் கொண்ட அவள், தன்னை மிகவும் தாழ்த்தி, எனக்கு உரிமை இல்லை, ஆனால் பங்கு உண்டு என தன் ஆணித்தரமான விசுவாசத்தை உறுதிப்படுத்தினாள். உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என இயேசுவின் பாராட்டுதலையும், தன் மகளுக்கு சுகத்தையும் பெற்று தன் விருப்பம் நிறைவேறினவளாக சென்றாள்.
எனக்கன்பானவர்களே! நம் விசுவாசம் எப்படியுள்ளது? அவர்களுடைய இரட்சிப்பு, படிப்பு, வேலை, திருமணம் என அனைத்துக் காரியங்களுக்கும் தேவனை நம்புவோம். அவரையே விசுவாசிப்போம். நம் விருப்பங்களை, அவருடைய சித்தத்தின்படி நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பாராக!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு
மிஷனெரிப் பிள்ளைகளுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864