By Village Missionary Movement
Monday, 20-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 20.01.2025
கற்களை அகற்றுங்கள்
"...அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப் போடுங்கள்..." - ஏசாயா 62:10
அழகான ரோஜாச் செடி ஒன்றை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு வைத்தாள் கிறிஸ்டி. மாதங்கள் கடந்தன. ரோஜாச்செடியில் ஒரு சிறு தளிர் கூட வரவில்லை. கிறிஸ்டிக்கு ஏன் என்று புரியவில்லை. தன் அம்மாவிடம் அந்தச் செடியைக் காண்பித்தாள். அவள் அம்மா செடி நட்டு வைத்திருந்த தொட்டியில் அநேகக் கற்கள் இருப்பதைக் கண்டு அந்தக் கற்களையெல்லாம் எடுத்துவிட்டு, நல்ல செம்மண்ணைக் கொண்டு தொட்டியை நிரப்பி உரம் போட்டு செடியை மறுபடியும் நட்டு வைத்தார்கள். அடுத்த மாதமே செடி நன்றாக வளர்ந்து அழகானப் பூக்கள் பூத்தன.
நம் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அநேக கற்கள் உண்டு, அது தேவன் வெறுக்கும் பாவங்கள், கர்த்தருக்குப் பிரியமில்லாதக் காரியங்களாயிருக்கலாம். இந்தப் பாவங்கள் நம்மை கர்த்தருக்குள் வளர விடாமல் தடுத்துக் கொண்டேயிருக்கும். கசப்பு, வைராக்கியம், மன்னியாமை, பொறாமை போன்ற பாவங்களை நம்மை விட்டு அகற்றும் போது நம் ஆவிக்குரிய வாழ்க்கையும் அழகாக வளர்ந்து பூத்து மணம் வீசும். நாமும் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவோம்.
நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார். கனி கொடுக்க தடையாயுள்ள காரியங்களை நம் வாழ்வினின்று அனுதினமும் அகற்றப் பிரயாசப்படுவோம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் சுய பெலத்தால், சுய முயற்சியால் மட்டும் இதை செய்து முடிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரின் பெலன் நமக்குத் தேவை. உதாரணமாக இயேசுவின் சீஷராகிய பேதுருவின் வாழ்விலும் சில கற்கள் காணப்பட்டன. தன்னுடைய சுயபெலத்தை நம்பினதும், முன்கோபத்தால் சில செயல்களை செய்ததும் கற்களாகத்தான் இருந்தது. இதனிமித்தம் அவர் வாழ்வில் பெரிய தோல்விகளை சந்தித்தார். ஆனால் என்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றாரோ அன்று முதல் தன் சுயத்தை அல்ல தேவபெலனையே சார்ந்து கொண்டு வெற்றியாய் வாழ்ந்து முடித்தார். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை, நிறைவை இதுவரை பெற்றுக் கொள்ளாதிருப்பீர்களானால் இன்றே ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான். நம் பெலத்தால், பிரயாசத்தால் செய்ய முடியாததை பரிசுத்த ஆவியானவர் செய்து நம்மை கனி கொடுக்கிறவர்களாக மாற்றுவார். நாம் முயற்சி செய்யாமல், இது நடக்காது. ஆம், நம் வாழ்விலுள்ள கற்களை ஆவியானவரின் துணையோடு அகற்ற பிரயாசப்படுவோம். ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து பிறருக்கும் ஆசீர்வாதமுள்ளவர்களாய் மாற்றுவார்.
- Mrs. விமலா ஆபிரகாம்
ஜெபக்குறிப்பு:
நம் இராக்லண்ட் பைபிள் காலேஜில் படிக்கும் பிள்ளைகள் கூர்மையான ஆயுதங்களாக உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864