By Village Missionary Movement
Monday, 10-May-2021இன்றைய தியானம்(Tamil) 10-05-2021
நீங்கள் ஆயத்தமா?
“...அவர்தாமே, சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.” – எபிரெயர் 2:18
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக, எனது உள்ளத்தில் அடிக்கடி பயமும் திகிலும் ஏற்படும். அப்படி பயம் ஏற்படும் நேரங்களில் என் உள்ளத்தில் ஏதோ ஒரு படபடப்பு தோன்றும் அன்று இரவு என்னால் தூங்க முடியாது. இவ்வாறு தூக்கமின்றி பல இரவுகளை கழித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனது அறையிலுள்ள விளக்குகளை எரியச் செய்து எனது தகப்பனை அழைத்து அவர்கள் அருகில் நான் படுத்துக்கொள்வது வழக்கம். இவ்வாறு அநேக நாட்கள் இனம் புரியாத பயத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.
இவ்வாறு இருந்த சூழ்நிலையில் ஆண்டவரை விசுவாசித்து, எனது நண்பர்களோடு இணைந்து ஒரு தோட்டத்தில் ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது எங்களை ஒருநாள் தேவ ஆவியானவர் நிரப்பினார். அன்று முதல் எனக்குள் இருந்த பயங்கள், திகில்கள் என்னை விட்டு நீங்கின. இவ்வாறு எனக்கு ஆண்டவர் அற்புதமாய் உதவி செய்தார். இன்று அநேகருக்கு ஆண்டவருடைய அன்பை அறிவிக்கின்ற ஒரு மகனாக ஊழியம் செய்து வருகிறேன். இன்றைய வேதபகுதியில் கடல் மீது நடந்து வந்த இயேசு கிறிஸ்துவை கண்டு சீடர்களும் ஆவேசம் என்று சொல்லி பயந்தார்கள். இயேசுகிறிஸ்து படகில் ஏறிய உடன் மழையும் காற்றும் அடங்கி அமைதியான சூழ்நிலை உண்டானது என்று வாசிக்கின்றோம்.
அன்புக்குரிய நண்பர்களே! நீங்களும்கூட ஏதோ ஒரு காரியத்திற்காக பயந்து கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில் வாழலாம். என்னுடைய வாழ்வில் செயல்பட்ட ஆண்டவர், உங்கள் வாழ்க்கையிலும் உதவி செய்ய ஆவலாய் இருக்கிறார். உங்களுடைய பயத்தைப் போக்க அவர் வல்லவராய் இருக்கிறார். உங்கள் வாழ்க்கை என்னும் படகில் அமர அவருக்கு இடம் கொடுங்கள், அவருடைய வல்லமையை விசுவாசியுங்கள் அற்புதத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். இதை வாசிக்கின்ற எல்லோரும் இப்படிப்பட்ட சூழ்நிலை வழியாய் சென்றிருப்பீர்கள் என்று கூற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அநேகர் ஏதோ ஒரு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சமாதான வார்த்தைகளை சொல்லி, அவர்களுக்கு உதவி செய்ய இயேசு உங்களை அழைக்கிறார். இப்படிப்பட்ட ஜனங்கள் விடுதலை பெறும்படி நற்செய்தியை அறிவிக்க நீங்கள் ஆயத்தமா?
- Y. அனீஸ்ராஜா
ஜெபக்குறிப்பு:
கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கும் நமது மிஷனெரி மனைவிமார்களுக்கு தேவன் அற்புதம் செய்ய ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250