Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.01.2025
Share:

By Village Missionary Movement

Monday, 13-Jan-2025

இன்றைய தியானம்(Tamil) 13.01.2025

 

சுகமாயிருப்பீர்கள் எப்போது?

 

"...என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின் படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்" - லேவியராகமம் 25:18

 

குறும்புக்கார சிறுவன் ஒருவன் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் ஒரு காலை மடக்கிக் கொண்டு அடுத்த காலை ஆட்டிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட ஒரு பெரியவர் "என்ன தம்பி இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?" என்றார். சிறுவன் அவரிடம் "என்ன செய்யணும் சொல்லுங்க?" என்றான். அதற்கு அவர் "நன்கு படி" என்றார். "அப்புறம்" என்றான் சிறுவன். "வேலைக்கு செல்" என்றார். இருவரும் பேச்சை விடுவதாக இல்லை சிறுவனும், "அப்புறம் என்ன?" என்றான். பெரியவர் தொடர்ந்தார். “நிறைய சம்பாதி, வீடு கட்டு, கார் வாங்கு" என வரிசையாக அடுக்கிக் கொண்டே சென்றார். "பின்பு?" என்றான் சிறுவன். "பின்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொள்ளலாம்" என்றார். சிறுவன் சிரித்தவாறு, "அதைத்தான் இப்பொழுதே செய்கிறேனே" என்றான்.  

 

சிறுவனின் பேச்சு வேடிக்கையையோ அல்லது வருத்தத்தையோ ஏற்படுத்தலாம். ஆனால் சுகமாய் குடியிருக்கும்படி உலகம் காட்டும் வாழ்வின் எதார்த்தம் இதுதான். ஆனால் சுகமாயிருக்கும்படி வேதம் கூறுவது என்ன தெரியுமா? லேவி. 25 :17,18,19 "பிறருக்கு அநியாயம் செய்யக்கூடாது. தேவனுக்கு பயப்படு, கர்த்தருடைய கட்டளையின்படி நியாயத்தைக் கைகொண்டு நடவுங்கள். அப்பொழுது தேசத்தில் சுகமாய் குடியிருப்பீர்கள்" என கூறுகிறது. பஞ்சத்தின் காரணமாய் தங்கள் பிழைப்பிற்காக அந்நிய தேசம் சென்று வெறுமையாய் திரும்பிய விதவைத் தாய் நகோமி, அவளுடைய விதவை மருமகள் ரூத்தை பார்த்து “நீ மரித்துப் போனவர்களுக்கும் எனக்கும் தயவு செய்தது போல தேவன் உனக்கும் தயவு செய்வார். நீ உன் சுய தேசத்திற்கு பிரிந்து போ” என்றாள். ஆனால் ரூத்தோ தன் மாமியிடம் “உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம். என்றும் உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" என்றும் கூறி, விடாமல் பற்றிக் கொண்டாள். தேவன் அவளை ஆசீர்வதித்தார். அவளுடைய வெறுமைகளை எல்லாம் நிறைவாக்கினார். போவாஸ் என்பவரை மணந்து, ஓபேத் என்ற மகனையும் பெற்றெடுத்தாள். சகலவித நன்மைகளையும் பெற்று தேசத்தில் சுகமாய் குடியிருந்தாள். அது மாத்திரமல்ல தேவமைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு முப்பாட்டியும் ஆனாள்.  

 

ஆம், எனக்கு அன்பானவர்களே! இன்றும் நம் தேவன் உங்களை தேசத்திலே சுகமாய் வாழ்ந்திருக்கும்படி விரும்புகிறார். பிறருக்கு விரோதமான தீமையை வெறுத்து, நன்மை செய்து, தேவனுடைய கட்டளைகளின் படி நடவுங்கள். தேவன் நிச்சயமாய் உங்களை ஆசீர்வதிப்பார். பூமிக்குரிய, உன்னதத்திற்குரிய, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதித்து, சகலவித நன்மைகளையும் காணச் செய்வார். நீங்கள் குறைச்சலை காணாதிருப்பீர்கள். உங்கள் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும். பரதேசியாய் சென்ற ஆபிரகாமை, யாக்கோபை, ரூத்தை ஆசீர்வதித்தது போல ஆசீர்வாதமாய் வாழ்ந்து சுகித்திருக்கப் பண்ணுவார்.  

- Sis. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு: 

பெண்களுக்காக ஆமென் வில்லேஜ் டிவியில் வெளிவரும் "இனியவளே" என்ற நிகழ்ச்சிக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al