By Village Missionary Movement
Friday, 10-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 10.01.2025
இருதயம் செப்பனிடப்பட
"...தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்" - 1 சாமுவேல் 30:6
கேரி மிக சிறந்த வேதாகம மொழிபெயர்ப்பாளர். முழு வேதத்தை இரண்டு மொழிகளிலும், புதிய ஏற்பாட்டை 40 மொழிகளிலும் மொழிபெயர்க்க காரணமாய் இருந்தவர். வேதத்தின் சில பகுதிகளை 12 க்கும் அதிகமான இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தார். இவ்வாறு தான் மொழி பெயர்த்த அநேக முக்கிய எழுத்துச் சுருள்களை தன் சேமிப்பு அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இது ஒரு நாள் இரண்டு நாள் முயற்சி அல்ல, பல ஆண்டுகள் இரவு பகலாய் கண்விழித்துச் செய்த கடினமான மற்றும் விடாமுயற்சியின் பலன்கள். அன்று அவர் எழுதியதை சேமித்து வைக்க கணிணி வசதியோ, எழுத்து பணியை எளிதாக்க ஜெராக்ஸ் வசதியோ இல்லை. கட்டுக்கட்டாக எழுதி வரிசைப்படி அடுக்கி வைத்திருந்த எல்லா முக்கிய தாள்களும் அந்தோ! திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு மணி நேரத்துக்குள் சாம்பலாய் கிடந்தன. எவ்வளவு பெரிய இழப்பு. எதிர்பாராத இந்த இழப்பினை அவரால் தாங்கிக் கொள்ள இயலாத ஒரு ஏமாற்றம். அவருடைய இருதயம் நொறுங்கிப் போனது. அவர்கள் மிஷனெரிகளின் தந்தையான வில்லியம் கேரி.
இதேப் போன்றதொரு வேதனை தாவீதுக்கு ஏற்பட்டது. தாவீதும் அவன் மனுஷரும் யுத்தத்தில் இருந்து திரும்ப சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, தாவீதும் அவனோடிருந்த மனுஷரின் மனைவிகளும், குமாரரும், குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள். தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுவதற்கு தங்களின் பெலனில்லாமல் போகும் மட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் அவனை கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னை திடப்படுத்திக் கொண்டான். இப்படியாக தாவீது தன் இருதயத்தை சரி செய்து செப்பனிட்டு வைத்திருந்தார்.
பிரியமானவர்களே! செப்பனிடுவது என்பது சரிசெய்வதாகும். வில்லியம் கேரி தன்னுடைய இருதயத்தை நன்றாகவே செப்பனிட்டு கொண்டதால் சற்றும் சோர்ந்து போகாமல் தான் செய்ய வேண்டிய எல்லாவிதமான மொழிபெயர்ப்பையும் செய்து முடித்தார். அதைப்போலவே, தாவீதும் தன்னுடைய இருதயத்தைத் திடப்படுத்தி இருந்ததின் விளைவாக இழந்து போன எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டார். செப்பனிடுவது கடினம் தான். ஆனாலும், நம்மை நாமே ஒவ்வொரு நாளும் சரிசெய்வோம் என்றால் ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றிதான். நம்மை நாமே நிதானித்து, அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் என்று வேதமும் எச்சரிக்கிறது. எனவே நம்மை உண்டாக்கின தேவனுக்கு முன்பாக நம்மையும், நம்முடைய இருதயத்தையும், நம்முடைய காரியங்கள் எல்லாவற்றையும் செப்பனிடுவோமாக.
- T. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
இவ்வாண்டில் நம் இலக்குகளில் சேர்ந்து தோள் கொடுக்கும் தேவ பிள்ளைகளைத் தேவன் செப்பனிட்டு பரிசுத்தப்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864