By Village Missionary Movement
Tuesday, 07-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 07.01.2025
தாழ்மையின் பலிபீடத்தை செப்பனிடுவோம்
"....தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்..." - லூக்கா 18 : 14
இன்று உண்மையாக தாழ்மையாயிருப்பவர்களை காண்பது மிகவும் அரிதாயிருக்கிறது. உலக வாழ்க்கையில் தங்களை மெய்யாய் தாழ்த்திய பலர் உயர்வான இடத்தைப் பெற்றார்கள். பெருமையாக இருந்த பலர் பதரைப் போல் காணாமல் போனார்கள். பெருமையினால் லூசிபர் தன் ஸ்தானத்தை இழந்தான். நமக்கும் பெருமையாக இருக்க வழி வகைகளை வகுத்துத் தந்து, பெருமை அடையச் செய்து அதலபாதாளத்திற்கு அழைத்துச் செல்ல காத்துக் கொண்டிருக்கிறான். ஏவாளை ஏமாற்றி பெருமையடையச் செய்து, கீழ்ப்படியாமல் தேவ கட்டளைக்கு செவிசாய்க்காதபடி ஏவாளை வீழ்த்தினான். (ஆதி. 3 : 5) நீங்கள் இதைப் புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்று ஆசை காட்டினான்.
தேவனுடைய சிங்காசனத்திற்கு மேல் தனது சிங்காசனத்தை உயர்த்த நினைத்து விழுந்து போனான். மனிதர்களுக்கு தேவனைப் போலாக ஆசைகாட்டி வீழ்த்துகிறான். இயேசுவையே சோதித்தான் நீர் என்னைப் பணிந்து கொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்றான். பிசாசின் தந்திர வலையில் அகப்பட்டு அநேகர் அழிந்து போகிறதைக் காண்கிறோம்.
அமெரிக்க அதிபராய் இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் மிகவும் தாழ்மையானவர். கடின உழைப்பாளி, கடவுளுக்கு பயந்தவர் என்று எல்லோரும் சொல்லும்படி வாழ்ந்து காட்டியதால் அவர் நம்பர் ஒன் ஜனாதிபதி என்ற அந்தஸ்துக்கு இன்று வரை சொந்தக்காரராய் இருக்கிறார். இவர் ஜனாதிபதி ஆகும் முன் ஒரு போர்ப்படை தளபதியாக இருந்தார். இவர் ஒருநாள் சாதாரண மனிதனைப் போல உடை அணிந்து தனியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். இவரை யாரும் படைத்தளபதி என்று அறியவில்லை. சிப்பாய்களுக்கு தலைவனாய் இருந்த ஒருவன் தன் கீழிருக்கும் சிப்பாய்களை கொடூரமாக வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த வாஷிங்டன் தலைவனிடம் நீரும் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்றார். உடனே அவர், "நான் தலைவர் வேலை செய்யமாட்டேன், வேலை வாங்குவதற்காகவே உள்ளேன்" என்றார். உடனே வாஷிங்டன் மற்ற சிப்பாய்களுடன் சேர்ந்து கடினமாக வேலை செய்துவிட்டு, போகும்போது ஒரு கார்டைக் கொடுத்து, வேலை செய்ய தேவைப்பட்டால் என்னை அழையுங்கள் வருகிறேன் என்றார். அதில் ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்க படைத் தளபதி என்று எழுதி இருந்தது. இதைப் படித்தவுடன் அந்த தலைவன் முகங்குப்புற அவர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.
இதை வாசிக்கின்ற நம்முடைய இருதயத்திலும் பெருமை குடிகொண்டிருக்குமானால், நம் இருதயமாகிய பலிபீடத்தை செப்பனிடுவோம். தாழ்மையை தேவனிடம் கேட்போம். மாயமான தாழ்மையினால் மனிதர்களை ஏமாற்றிக் கொண்டிருப்போமானால் மனந்திரும்புவோம். மெய்யான மனத்தாழ்மையை தரித்துக் கொள்வோம்.
- Mrs. பாத்திமா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
இந்தியா முழுவதும் 50,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864