By Village Missionary Movement
Monday, 06-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 06.01.2025
நன்றியே நன்மையானதைத் தரும்
"…அவர் செய்த சகல உபகாரங்கயைளயும் மறவாதே" - சங்கீதம் 103:2
இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் தங்களுக்கு செய்த நன்மைகளை மறந்ததால், நன்றி சொல்வதற்குப் பதிலாக முறுமுறுத்தார்கள். முறுமுறுத்ததால் கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் வனாந்தரத்திலே மடிந்து போனார்கள். நாமும் தேவன் செய்த நன்மைகளை மறந்தால் தானாகவே குறைகூறுதலும், முறுமுறுப்பும் நம் இருதயத்திற்குள் வரும். அது பாவத்திற்கு நேராய் நம்மை வழிநடத்தும். அதினிமித்தம் பரலோக கானானுக்குள் பிரவேசிப்பது கூடாத காரியமாகிவிடும். ஆகையால் தேவன் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்து நன்றி பலி செலுத்தும்படி நமது வாழ்க்கையை செப்பனிடுவோம்.
தாய் தகப்பனை இழந்த ஒரு அனாதை சிறுவன், தன் பசியைப் போக்க பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஒரு கடைக்கு முன்பாக நின்று பசிக்குது, ஏதாவது தாருங்கள் என்று பலரிடம் கேட்டான். ஒருவரும் ஆகாரம் வாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு பணம் தரவில்லை. ஒரு நபர் சிறுவனுடைய நிலையைப் பார்த்து, அவன் திருப்தியாக புசிக்க உணவு வாங்கிக் கொடுத்து விட்டு, அவர் சாப்பிடச் சென்று விட்டார். தனக்கு உணவு வாங்கிக் கொடுத்தவர் சாப்பிட்டு வரும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறுவன், அவர் வந்ததும் ஐயா, நன்றி என்றான். உணவு வாங்கிக் கொடுத்த நபருக்கு சிறுவனின் செயல் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த சிறுவனை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி ஒரு ஊழியனாக மாற்றினார். அவர் தான் மேக்ஸ் லுகாடோ என்ற பிரேசில் நாட்டு மிஷனெரி ஆவார். பத்து குஷ்டரோகிகளில் ஒருவர் மாத்திரம் நன்றி உள்ளவராய் இருந்தார். இயேசுவால் சுகம் பெற்ற பத்து குஷ்டரோகிகளில் ஒன்பது பேரும் நன்றி மறந்தவர்களாயிருந்தார்கள். முப்பது வெள்ளிக் காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான் யூதாஸ்காரியோத். இயேசுவால் ஆன்மீக நன்மையையும் இவ்வுலக நன்மையையும் பெற்ற யூதாஸ், நன்றியை மறந்ததால் துரோகியாகிப் போனான். விண்ணுலக நன்மையை பெறாதபடி, இவ்வுலக ஆசை அவனை அழித்துவிட்டது. பேதுரு இயேசுவால் பெற்ற நன்மையை நினைவுகூர்ந்ததால், மறுதலித்த தனது நன்றி கெட்ட தன்மைக்காக மனம் வருந்தி அழுதார். இயேசுவும் பேதுருவை ஏற்றுக்கொண்டார்.
இன்று நாமும் நன்றியை மறந்து இயேசுவை நமது செயல்களால் மறுதலித்திருந்தால், ஆதி அன்புடன் இயேசு செய்த நன்மைகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வண்ணமாக, நமது கிரியைகளை செப்பனிடுவோம். யோவான்ஸ்நானகன் கூறியது போல், (மத்தேயு 3 : 8) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் நூறத்தனையான பலன்களைப் பெறுவோம். ஆமென்
- Mr. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
இந்தியா முழுவதிலும் 1000 மிஷனெரிகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864