By Village Missionary Movement
Thursday, 26-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 26.12.2024
நன்றி சொல்லும் நேரமிது
"அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு,... அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்;…" - லூக்கா 17:15,16
இந்த வேத பகுதியில் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பத்து தொழுநோயாளிகள் இயேசுவை உரத்தச் சத்தமாக அழைக்கின்றனர். (மத். 8 :2-4)ல் ஒரு தொழுநோயாளியை தம் கையினால் தொட்டுச் சுகமாக்கினார். ஆனால் இங்கு தம் வார்த்தையினாலே அவர்களை குணமாக்கி, நீங்கள் போய் ஆசாரியருக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். விசுவாசத்துடன் கர்த்தரின் வார்த்தையை நம்பி சென்றவர்கள் சுகமானார்கள். அதில் ஒருவன் மட்டும் தான் சுகமானதைக் கண்டு அவரை மனதார தொழுது நன்றி செலுத்தினான். தேவனின் பாராட்டைப் பெற்று விசுவாசத்துடன், இரட்சிப்பையும் பெற்றுச் சென்றான். இன்று தொழுநோயானது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றைய சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், விபத்துக்கள், குடி, போதை பழக்கவழக்கங்கள், வியாதிகள், பொருளாதார நெருக்கடி, ஏமாற்றுத் தனங்கள் என்ற பல பெரும்பாடுகள் மனிதர்களை ஆட்டி துயரப்படவைக்கிறது. ஆனால் தேவப் பிள்ளைகளாகிய நம்மை அனுதினமும் கண்மணி போல பாதுகாத்து, நம்மை நிர்மூலமாகாமல் காத்துக் கொள்ளும் கர்த்தரின் கிருபை எவ்வளவு பெரியது. (புலம்பல்3:23).
2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். "தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி," (2 பேதுரு 1: 3). கடந்த மாதங்களிலெல்லாம் நம் வாழ்விற்குத் தேவையான பணம், ஆகாரம், உடை, உறைவிடம் மற்றும் சகல பாதுகாப்பையும் குறித்த நேரத்தில் அருளி நம்மை ஆச்சரியமாக வழிநடத்தின தேவனுக்கு நன்றி சொல்லுவோம்.
தேவன் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். எல்லா நேரத்திலும் நாம் எதிர்பார்ப்பது போல இல்லாவிடினும், எல்லா சூழ்நிலையிலும் நம்மை தாங்கி, ஏந்தி, சுமந்து வழிநடத்தி வருகிறார். எனவே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் நன்றியுள்ள இருதயத்துடன் வாழ்வோம். இம்மட்டும் நடத்தின இம்மானுவேல், இனியும் நடத்தும் எபிநேசராக நம்மோடு இருப்பார். எனக்கன்பானவர்களே! தேவன் தரும் மெய்யான சந்தோஷம், சமாதானத்துடன் புத்தாண்டில் பிரவேசிக்கக் கிருபை செய்வாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
நம் தரிசனத்தில் நம்மோடு இணைந்து செயல்படும் தோழமை மற்றும் தெபோராள் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864