By Village Missionary Movement
Wednesday, 18-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 18.12.2024
தப்புவிக்கும் கன்மலை
"வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்." - சங்கீதம் 124:7
அடித்து செல்லப்பட்ட நீரில் எறும்பு தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட புறா ஒன்று மரத்தில் உள்ள இலையை கொத்தி போட, தப்பியது எறும்பு. தன்னைக் காப்பாற்றிய அப்புறாவை குறிவைத்துக் கொண்டிருந்த வேடனின் கால்களில் கடித்தது எறும்பு. வேடனின் சத்தம் கேட்டு குறி தப்பி பறந்து தன்னைக் காத்து கொண்டது அப்புறா. கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றப்பட்டது எறும்பும், புறாவும். பாலர் பள்ளியில் படித்த கதை தான் இது, இவ்வருடத்தின் கடைசி மாதத்தில் பயணிக்கும் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்போமென்றால் நம்முடைய வாழ்க்கைப் பிரயாணத்தில், வியாதியில், தோல்வியில், இழப்புகளில் நம்மை கைவிடாதிருந்தாரே நம் தேவன். மரணத்தின் விளிம்பு வரை சென்ற நம்மில் பலரை தப்புவிக்கும் கன்மலையாக நம் தேவன் இருந்தாரல்லவா!
வேதத்தின் ஆரம்பம் முதல் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களை தேவன் தப்புவித்ததை வாசிக்கிறோம். தாவீது சவுல் ராஜாவுக்கு எத்தனையோ நன்மைகள் செய்திருந்தும், தாவீதை கொல்ல அலைந்து திரிந்தார் சவுல். சீப் ஊர் மக்களும் ராஜாவினிடத்தில் வந்து தாவீதை பிடிக்க உதவுகிறோம் என சொல்லி, அங்கிருந்த மலைக்காட்டில்,மாகோன் வனாந்தரத்தில் சவுலும் அவன் மனுஷரும், தாவீதையும் அவன் மனுஷரையும் சுற்றி வளைந்து கொண்டார்கள். (1சாமு 23 : 26) முடிந்தது இத்துடன் தாவீதின் வாழ்வு என முதல் முறை வேதத்தை வாசிக்கிறவர்களுக்குத் தோன்றும். ஆனால் அத்தனை முறையும் தாவீது தப்பினார். தன்னை தப்புவித்த தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாய் "சேலா அம்மாலிகோத்" (தப்புவிக்கும் கன்மலை) என பெயரிட்ட பின் தாவீது பாதுகாப்பான இடம் தேடிச் செல்கிறார். தாவீது தாம் எழுதிய சங்கீதங்களில் கர்த்தர் என் கன்மலை, என் கோட்டை, என் அடைக்கலம், என் அரண்... என்று ஓயாமல் புகழ்வது ஏன் தெரியுமா? ஆம், தன்னை தப்புவித்த கன்மலையாகிய தேவன், எப்போதும் தன்னோடு உண்டு என்பதனை ருசித்ததினாலேயே!
நாமும் இந்த பதினோரு மாதங்களும் நம்மைக் கண்மணி போல் காத்த தேவனுக்கு நன்றி சொல்வோமா? எத்தனையோ நேரங்களில், நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தேவன் நம்மை ஆபத்திலிருந்து, தீங்கிலிருந்து தப்புவித்தார். நம்மைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு, நம் பாதம் கல்லில் இடறாதபடி காத்திருக்கிறார். நம் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டிருக்கிறார். ஆம், அவர் தப்புவிக்கும் கன்மலை! தாவீதை மாத்திரமல்ல, நம்மையும் தப்புவிக்கும் கன்மலை!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தில் பயனடைந்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864