By Village Missionary Movement
Wednesday, 11-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 11.12.2024
ஆசீர்வாதத்தை அறிந்து கொள்ளுங்கள்
"...நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்" - கலாத்தியர் 4:28
ஒரு முறை கப்பல் ஒன்றில் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் மிகவும் சோர்ந்து களைத்துப்போயிருந்தார். இதைக் கண்ட கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "ஐயா இரண்டு நாட்களாக நான் உங்களை கவனித்து வருகிறேன். நாளுக்கு நாள் நீங்கள் மிகவும் சோர்ந்து காணப்படுகிறீர்கள்! உங்கள் பிரச்சனை என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர், "ஐயா நான் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த ரொட்டி எல்லாம் தீர்ந்து விட்டன. இனி சில காய்ந்த ரொட்டி துண்டுகளே இருக்கின்றன. இதுவும் தீர்ந்துவிட்டதென்றால், என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. இன்னும் அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டியதாயிருக்கிறது!" என்றார் பயணி சோகம் கலந்த குரலில்!
இதைக் கேட்ட கப்பல் தலைவன், "ஐயா உங்கள் பயணச்சீட்டை கொடுங்கள்" என்று அவரது பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார். "ஐயா இந்த பயண சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கப்பலிலேயே உணவு வழங்கப்படும். இதோ இங்கே எழுதியிருப்பதை பாருங்கள்!" என்று அதில் எழுதியிருந்ததைக் காட்டினார். இந்த பயணி ஒன்றும் புரியாமல் விழித்தார். தன் அறியாமையை நினைத்து மனம் வருந்தினார்.
பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்று எபேசியர் 1:3ல் எழுதப்பட்டிருக்கிறது. பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என ஆபிரகாமிடம் ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய புத்திரசுவிகாரத்தின் ஆவியை பெற்றிருக்கிறோம். சிலுவையில் நமக்காக இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்து சிலுவையில் நமக்காக சம்பாதித்துள்ள ஆசீர்வாதங்களை அறிந்து கொள்வோம். அறியாத பட்சத்தில் நம் கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்று ஒரு வல்லமையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ தெரியாமல், சாத்தானின் பிடியில் சிக்கி அவனுக்கு ஓர் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்போம். இன்றே நிதானிப்போம். கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ அர்ப்பணிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Bro. சிவா பழனிச்சாமி
ஜெபக்குறிப்பு:
இவ்வாண்டின் தலைப்பிற்கேற்ப அநேக கிராமங்களுக்கு, மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு புறப்பட்டு செல்ல தேவன் உதவியமைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864