By Village Missionary Movement
Tuesday, 03-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 03.12.2024
பயணங்கள் தொடரும்
"கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி; எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்" - 1 இராஜாக்கள் 19:7
காட்னர் டெய்லர் ஒரு கருப்பினத்தவர். 1918இல் லூசியானாவில் ஒரு அடிமையின் பேரனாக பிறந்தவர். நிறவெறியை மீறி ஒரு போதகராகி அமெரிக்க பிரசங்கிகளின் தலைவராக கருதப்பட்டவர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பெரிய சபையை நடத்தினார். இனவெறியை எதிர்த்து சமத்துவத்திற்காக போராடியவர். உலகமெங்கும் அதிகம் விரும்பப்பட்ட நற்செய்தியாளர்.
தனது 89 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிக இடங்களுக்கு செய்தியளிக்க போக முடியவில்லை. அசோஷியேட்டட் பிரஸ்ஸைச் சார்ந்த ரேச்சல் ஸோல் என்பவரிடம் கூறும் போது, "நான் எல்லாவற்றையும் இழந்து விட்டது போல் சோர்ந்து போனேன்" என்றார். ஆனாலும் பிற்பாடு ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு, ஒரு சமயம் இருக்கிறது. அவைகளை நாம் எவ்வளவு ஆதாயப்படுத்துகிறோமென்பதே முக்கியம் என்று விசுவாசத்தோடு கூறினார். தன்னுடைய ஊழிய நாட்கள் முடியவில்லை. இன்னும் தொடர வேண்டுமென்று விரும்பி, பெலவீன நாட்களிலும் உற்சாகமாய் தனது ஓட்டத்தை நிறைவு செய்தார்.
இன்றைய வேத பகுதியில் எலியா தீர்க்கதரிசி, தான் ஒரு கடைசி கட்டத்தில் இருப்பதாக மனதிலே சிந்தித்துக் கொண்டிருந்தார். தேவனோ எலியாவிடம், "நீ செல்ல வேண்டிய பிரயாணம் வெகு தூரம்" என்று அவரை பலப்படுத்தி ஊழியத்தை தொடரச் செய்தார். ஆதியாகமம் 28 ஆம் அதிகாரத்தில் யாக்கோபிடம் தேவன் இப்படியாக வாக்கு பண்ணினார். நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னை கைவிடுவதில்லை என்றார். நமது கர்த்தர் உண்மையுள்ளவர். மோசே தேவனைக் குறித்து சொல்லும் போது, அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் என்று கூறுகிறார். காலங்களையும், யுகங்களையும் கடந்து காணப்படும் நம் தேவன் இந்த செய்தியை வாசிக்கும் உங்களை எல்லா நாட்களிலும் நடத்த வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
ஆண்டவர் நம்மில் தொடங்கிய நற்கிரியைகளும், நாம் அவருக்காக எடுத்திருக்கிற தீர்மானங்களும் முடிந்து போகவில்லை. அது நிறைவேறுமளவும் அது தொடர வேண்டும். நம்மில் நற்கிரியையை தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்த வல்லமையுள்ளவரென்று நாம் விசுவாசிப்போம். கடந்த நாட்களில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களை தேவ ஒத்தாசையுடன் மறந்து விடுங்கள். உங்களது பயணங்கள் இனிதாகட்டும்.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
25,000 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் நம்முடன் வந்த சபையார், ஊழியர்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864