By Village Missionary Movement
Saturday, 23-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 23.11.2024 (Gospel Special)
தேவனுடைய பாத்திரங்கள்
"…எஜமானுக்கு உபயோகமானதும்,… பாத்திரமாயிருப்பான்" - 2 தீமோத்தேயு 2:21
நாம் தேவனுடைய கரத்திலிருக்கும் பாத்திரமாய் இருக்கிறோம். இன்று உலக மக்கள் அனைவருமே மற்றவர்களால் உபயோகப்படுத்தப்படும் பாத்திரமாகவே இருக்கிறார்கள். பவுல் அப்போஸ்தலர், ஆவிக்குரிய பாத்திரமாக உலகம் முழுவதற்கும் தேவனால் உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரமாய் இருந்தது போல, சமீபத்தில் டாடா நிறுவனத்தின் தலைவர், ரத்தன் டாடா அவர்கள் உலக மக்களுக்கு பிரயோஜனமான, பாத்திரமாய் உபயோகமாக இருந்துள்ளார். இதே போல் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒரு வகையில் அடுத்தவர்களுக்கு துணையான பாத்திரமாக இருந்து வருகிறார்கள். நாம் ஆவிக்குரியவர்கள் தேவனால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். தேவ சித்தத்தின்படி நாம் தேவராஜ்ய நியமத்தின்படி செயல்படுகிற பாத்திரங்களாய் தேவனுக்குரியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
சாது சுந்தர்சிங் சீக்கிய முறையில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்துவையும் வேதத்தையும் வெறுத்தவர். ஆனால் கர்த்தர் அந்த பாத்திரத்தை தெரிந்து கொண்டார். உலக மக்கள் சாது சுந்தர் சிங் மூலம் கிறிஸ்துவை கண்டு கொண்டார்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்கள், அறிவித்தவர்கள் விசேஷமான பாத்திரங்கள் என்பதை உலக சரித்திரம் கூறுகிறது. மிஷனெரிகளாக வந்தவர்கள் சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வந்து, சரித்திரம் படைத்தார்கள். வில்லியம் ஹேரி இந்தியாவில் சமுதாயங்களிலிருந்த மூடப் பழக்கவழக்கங்களை அகற்ற பாடுபட்டு, சீர்திருத்த செயல்கள் மூலம் மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஒவ்வொரு மிஷனெரியும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவுகளை எழுதப்போனால், உலகம் கொள்ளாது! நர மாமிசங்களை தின்று வாழ்ந்த நாகலாந்து மக்கள் இன்று கிறிஸ்தவர்களாக உள்ளனர். இதே போல பல நாடுகளில் மனிதர்களை வேட்டையாடி சாப்பிடும் பழக்கத்தில் இருந்தவர்கள், பல தியாகமுள்ள மிஷனெரிகளின் ஊழியத்தின் மூலம் தேவன் அவர்களை மாற்றியுள்ளார் என்பதை பல நாட்டு சரித்திரங்கள் எடுத்து கூறுகிறது. மிருகம் போல் வாழ்ந்த ஆப்பிரிக்க நாட்டு மக்கள் இன்று மனிதர்களாய் வாழ்வதற்கு காரணம் மிஷனெரிகளின் தியாகமுள்ள பணிகளே ஆகும். மிஷனெரிகள் தேவ கரத்தில் பயனுள்ள பாத்திரங்களாய் செயல்பட்டது போல், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில், தேவகரத்தில் பயன்படும் பாத்திரங்களாய் செயல்பட அர்ப்பணிக்க வேண்டும். நாம் யார் கரத்தில் இருக்கிறோம்? தேவகரத்தில் இருந்தால், எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாய், அழியும் ஆத்துமாக்களை தேவனண்டை கொண்டுவருகிற பாத்திரமாய் வாழுவோம் எனபதில் சந்தேகமில்லை.
- Bro. சாமுவேல் மோரீஸ்
ஜெபக்குறிப்பு:
இந்த ஆண்டில் ஒரு லட்சம் சிறுபிள்ளைகள் சிறுவர் முகாம்கள் மூலம் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864