By Village Missionary Movement
Wednesday, 13-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 13.11.2024 (Gospel Special)
ஆத்துமபாரம் வேண்டும்
"...யாரை நான் அனுப்புவேன்,... அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்" - ஏசாயா 6:8
ஒரு தாய் மிஷனெரிப் பணிக்கு தன் மூத்த மகனை அனுப்பி வைத்தாள். தனது மகன் அழிந்து போகின்ற ஆத்துமாக்களை காப்பாற்றுவான் என விசுவாசித்து ஜெபித்து கொண்டிருந்தாள். ஒரு செய்தி வந்தது உன் மகனை அவன் ஊழியம் செய்த பகுதி மக்கள் அடித்து, உயிரோடே சாப்பிட்டு விட்டார்கள் என்று. மனமுடைந்து போன தாய் இளைய மகனை அழைத்தாள், "மகனே உன் அண்ணன் ஊழியம் செய்த பகுதியில் போய் நீ தொடர்ந்து அந்த ஊழியத்தை செய்", என்று அனுப்பினாள். அவனும் தாயின் வேண்டுதலுக்கு இசைந்து அந்த பகுதிக்கு ஊழியத்திற்குச் சென்றான். சில மாதங்கள் கழித்து ஒரு செய்தி வந்தது உன்னுடைய இரண்டாவது மகனையும் கொன்று விட்டார்கள். இந்த செய்தியை கேள்விப்பட்ட தாய் தனது கடைசி மகனை அழைத்து மகனே உன் அண்ணன்மார்கள் ஊழியம் செய்த பகுதிக்கு போய் ஊழியம் செய்ய வேண்டும் என்று அனுப்பினாள். சில மாதங்கள் கழித்து செய்தி வந்தது உன் மூன்றாவது மகனையும் கொன்றுவிட்டார்கள் என்று. இதைக் கேட்ட மாத்திரத்தில் அந்த தாய் கதறி, கதறி அழுதாள். எல்லாரும் மற்ற மகன்கள் மரித்த செய்தியைக் கேட்ட போது நீ இப்படி அழவில்லையே இப்பொழுது என்னானது? என்று கேட்டபோது, அந்த தாய் சொன்னாள், "இன்னும் அந்தப் பகுதியில் ஊழியம் செய்ய எனக்கு மகன்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து அழவில்லை. இப்பொழுது எனக்கு அங்கு ஊழியத்திற்கு அனுப்ப மகனில்லையே என்று அழுகிறேன்" என்றாள்.
பிரியமான தேவமக்களே! நம்முடைய ஆத்தும பாரம் எந்த அளவு உள்ளது?. தன்னுடைய பிள்ளைகள் வரிசையாக செத்தாலும் அந்த ஊழியம் நின்று விடக்கூடாது என்று தொடர்ந்து மகன்களை அனுப்பி ஊழியம் செய்ய வைத்த அந்த தாயின் ஆத்துமபாரத்தைப் பாருங்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த ஆத்துமபாரம் இல்லை. ஏன் சபை போதகர்கள், ஊழியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து டாக்டராக்கி, இன்ஜினியராக்கி வெளிநாட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என நினைக்கின்றனர். உங்களுக்குப் பின் சபை ஊழியத்தை யார் பார்ப்பார்கள் என்றால், வேறு ஒருவரை நியமித்து பார்க்க வேண்டியதுதான் என்கின்றனர். இப்படி ஆத்தும பாரம் இல்லாமல் ஊழியர்கள் இருக்கும்போது விசுவாசிகளிடத்தில் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். இதே ஆத்தும பாரத்தோடு இங்கு பல மிஷனெரிகள் வந்ததினால்தான் நாம் இயேசுவை கண்டு கொண்டோம். அந்த ஆத்தும பாரத்தோடு நாமும் செயல்பட்டால் தான் சுவிசேஷ தீபம் அணையாமல் இருக்கும்.
இதை படிக்கிற விசுவாச மக்களே! நமக்குள் ஆத்துமபாரம் இருந்தால் தான் நம் பிள்ளைகளுக்குள்ளும் கடத்தப்படும். ஆத்துமபாரம் இல்லாமல் நாம் ஊழியம் செய்வது பயனில்லாதது. நாம் ஆத்துமபாரத்தை குறித்து நம் பிள்ளைகளுக்கும் ஊட்டி ஊழியத்திற்கு அனுப்புவோம். நம் பிள்ளைகளும் பரலோக பலனை பெறட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் சேனலாக மாற, மற்றும் கிட்ஸ் டிவி ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864