By Village Missionary Movement
Tuesday, 12-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 12.11.2024 (Gospel Special)
ஆத்தும ஆதாயம்
"…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" - மாற்கு 16:15
இரட்சிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழும் ஒவ்வொருவரும் பிறருக்கு சுவிசேஷம் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எனக்குத் திருமணம் முடிந்த புதிதில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கிராம சபையில் மிஷனெரிகளாக பணியாற்றிக் கொண்டிருந்தோம். ஒரு ஞாயிறன்று ஆராதனையும், ஓய்வு நாள் பாடசாலை வகுப்புகளும் முடிந்த பின்னால் மதியம் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டின் வாசலில் 10 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி சோகச் சிரிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள். உள்ளே அழைத்து சில தின்பண்டங்களை சாப்பிடவைத்து வீட்டிற்கு போகுமாறு சொன்னேன். ஆனால் அவளோ போக மறுத்து, அக்கா நீங்களும் அண்ணனும் அறிவிக்கிற அந்த இயேசு கிறிஸ்து எனக்கு வேண்டும் என்றாள்.
பெண் சிசுக்கொலை நிறைந்த உசிலம்பட்டி பகுதியில் இவளும், பிஞ்சிலே அத்தகைய கொடிய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு ஆச்சரியமாக உயர் பிழைத்தவள். ஆனால் எல்லோராலும் வெறுத்து, ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட அவள், உயிர் பிழைத்ததால் பிச்சையம்மாள் என பெயரிடப்பட்டிருந்தாள். எவ்வித பராமரிப்பும், அன்புமற்ற நிலையில் அங்குள்ள ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்துவின் அன்புடன், எங்கள் அன்பு அவளை கிறிஸ்துவண்டை ஈர்த்தது. தொடர்ந்து ஆலயம் வந்ததோடு என்னோடு சேர்ந்து, ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் கற்றுக் கொண்டாள். என்னால் இயன்றவரை அவளை அன்புடன் பராமரித்து கல்வியும் கற்றுக் கொடுத்தேன்.
இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிச்சையம்மாள் ஞானஸ்நானம் பெற்று, கிரேஸ் ஆனாள். குடும்பத்தார் பார்த்த ஒரு பையனை திருமணம் செய்ய வற்புறுத்தினர். ஆனால் விசுவாசியான நான் எப்படி அவிசுவாசியுடன் இணைய முடியும்? என மறுத்துவிட்டாள். எனக்கு கிறிஸ்தவ மாப்பிள்ளையை நீர் தரமுடியும் என விசுவாசத்துடன் ஜெபித்துக் கொண்டிருந்தாள். தேவன் தம் அநாதித் தீர்மானத்தின்படி, இந்துக் குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்த எலியா பாண்டி என்ற மணமகனை எங்களுக்குக் காண்பித்தார். மூன்று பிள்ளைகளையும் தேவன் கொடுத்து திண்டுக்கல் பகுதியில் உள்ள கிராமத்தில் சபை ஊழியத்திலும், சுவிசேஷ ஊழியத்திலும் தேவன் பயன்படுத்தி வருகிறார்.
சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ! (1 கொரி 9 : 16.) ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். (நீதிமொழிகள் 11:30). எனக்கன்பானவர்களே! யாவருக்கும் சுவிசேஷம் அறிவிக்க கடனாளிகளாயிருக்கிறோம். (ரோமர் 1 : 14 - 15) இப்படிப்பட்ட அநேக சாட்சிகள் எழும்ப தேவன் நம்மை பயன்படுத்துவாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் டிவியாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864