By Village Missionary Movement
Tuesday, 05-Nov-2024
இன்றைய தியானம்(Tamil) 05.11.2024 (Gospel Special)
எப்படி விசுவாசிப்பார்கள்?
"...அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?" - ரோமர் 10:14
கிறிஸ்தவர் ஒருவர் வழக்கறிஞரின் அறைக்குள் நுழைந்தார். தான் வந்த நோக்கத்தை முடித்து விட்டு வெளியே புறப்படும் முன், நீண்ட நாட்களாகவே அவருக்குள் இருந்த அந்த கேள்வியை அவரிடம் கேட்டுவிட்டார். என்ன கேள்வி அது? ஐயா நீங்கள் ஏன் கிறிஸ்தவராகவில்லை? இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவ்வழக்கறிஞர் மலைத்து நின்றார். சற்று சுதாரித்து கொண்டு, தன் தலையை தொங்க விட்டவராக, வேதாகமத்தில் குடிவெறியர்கள் பரலோக ராஜ்யத்திற்கு அருகதை அற்றவர்கள் என்று இருக்கிறது அல்லவா? என்னுடைய பெலவீனம் அதுதான். எனவே நான் கிறிஸ்தவனாகவில்லை என்று பதிலளித்தார். வழக்கறிஞரிடம் வந்தவர் மீண்டும் அந்த கேள்வியை கேட்டார். அவர், "ஒருவரும் இதுவரை என்னை இந்த கேள்வியை கேட்டதில்லை. நான் எப்படி ஒரு கிறிஸ்தவனாகக்கூடும்? எனக்கு சொல்லித் தாருங்கள்" என்றார். அப்பொழுது கேள்வி கேட்டவர் வேதத்தின் சத்தியங்களை வழக்கறிஞருக்கு புரிய வைத்தார். இந்த சிறிய ஜெபத்தை செய்யுங்கள் "ஆண்டவரே, என் பெலவீனம் எனக்கு தெரியும். அதை என்னிடத்திலிருந்து மாற்றிப் போடும்" என்றார். அற்புதமாய் குடிபழக்கத்திலிருந்து ஆண்டவர் விடுதலையைக் கொடுத்தார்.
பிரியமான தேவ மக்களே! நம்முடைய தேவன் எப்படிப்பட்ட பாவங்களையும் மன்னிக்கிறவர். தேவனால் மன்னிக்க படமுடியாத எந்த பாவமும் இல்லை. இன்றைக்கு அநேக மக்கள் என்னுடைய பாவம் பெரியது. அதற்கு மன்னிப்பே கிடையாது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த பாவத்தை என்னால் விடவும் முடியாது, மறக்கவும் முடியாது நான் என்ன செய்வது என்று குற்ற உணர்வோடு வாழ்கிறார்கள். ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி தனது புஸ்தகத்தில் ". . .உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்", (1:18) என எழுதியுள்ளார். நீங்கள் மனம் பொருந்திச் செவி கொடுத்தால், நிச்சயமாக பாவமன்னிப்பு கிடைக்கும்.உங்கள் பாவங்களை மன்னிக்கிற இயேசு கிறிஸ்து ஒருவர் உண்டு என நாம் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு எடுத்துச் சொல்லாவிட்டால் எப்படி அறிந்து கொள்வார்கள்?.
பாவம் செய்து அதிலிருந்து விடுப்பட முடியாமல் சிக்கி இருக்கிறவர்கள் இன்றும் பலர் உண்டு. அவர்களுக்கு இயேசுகிறிஸ்து விடுவிக்க வல்லவர் என எடுத்துச் சொல்ல ஆட்கள் தேவை. பிரசங்கிக்கிறவர்கள் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாய் ஏன் நாம் இருக்கக் கூடாது? நாம் நம் கடமையை செய்வோம், தேவன் அவரது கடமையை நிறைவேற்றுவார். ஆமென்! அல்லேலூயா!
- Pr. S.A.இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
25000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் கைப்பிரதிகள், நற்செய்தி புத்தகங்கள் பெற்ற நபர்கள் உள்ளங்களில் தேவன் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864