By Village Missionary Movement
Saturday, 19-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 19.10.2024
இயன்றதைச் செய்தார்கள்
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;…" - மாற்கு 14:8
என் உறவுமுறையில் ஒரு சிறுவன் உடல் பலவீனமாக இருந்தான். கொஞ்ச தூரம் நடந்து சென்றாலே அவனுக்கு அதிக இளைப்பு ஏற்பட்டு விடும். ஒருமுறை ஊரில் உள்ள எங்கள் தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், அவனைக் கஷ்டப்பட்டு அவனது அக்கா முதுகில் சுமந்து வந்தார்கள். அதை பார்த்து இரக்கமுற்று அவனை நான் என் முதுகில் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது நானும் சிறுவன் தான். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக நான் செய்த உதவியை அவர்கள் இன்று வரை மறக்கவில்லை. பாருங்கள் மனிதர்களே பிறர் தங்களுக்குச் செய்த உதவியை நன்றி மறக்காமல் நினைவில் வைத்திருக்கையில், அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவர் நாம் அவருக்காக செய்ததை மறந்து விடுவாரோ! "தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே." (எபிரேயர் 6 : 10)
பரிசுத்த வேதாகமத்தில், (மாற்கு 14 ல்) ஒரு ஸ்திரீ நளதம் என்னும் விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுவின் சிரசின் மேல் ஊற்றினாள் அன்பினிமித்தமாக. அப்பொழுது சிலர் அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். ஆனால் இயேசுவோ “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்." இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பாருங்கள்! அன்று நடந்த அந்த சம்பவத்தை இன்றும் நாம் நினைவு கூறுகிறோம். ஆம் வாக்குப்பண்ணினவர் வாக்கு மாறாதவர்.
ஒரு சிறிய அடையை எலியா தீர்க்கதரிசிக்குக் கொடுத்த சாறிபாத் விதவை, சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமானின் குஷ்டம் நீங்க, எலிசா தீர்க்கதரிசியிடம் செல்லுமாறு கூறிய அந்த சிறு பெண், இரண்டே காசான தன் ஜீவனத்துக்கு உண்டானதெல்லாம் காணிக்கையாகப் போட்ட அந்த ஏழை விதவை, புருஷர்கள் மாத்திரம் ஏறக்குறைய 5000 பேர் சாப்பிட்டு மீதம் 12 கூடை நிறைய எடுக்க ஐந்து அப்பம் இரண்டு மீனை இயேசுவின் கரத்தில் கொடுத்த அந்தப் பையன் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாரும் தங்களால் இயன்றதை ஆண்டவர் மேலுள்ள அன்பினிமித்தம் கொடுத்தார்கள். இன்றளவும் பேசப்படுகிறார்கள்.
இதை வாசிக்கிற, கேட்கிற நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை, பணத்தை, பொருளை, உடல் உழைப்பை ஆண்டவருக்காக கொடுக்கக் கூடாது? எத்தனையோ தேவையோடிருக்கும் ஊழியங்கள், மிஷனெரி ஸ்தாபனங்கள் மற்றும் ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவலாமே. கர்த்தரின் அன்பை பற்றி மற்றவருக்கு அறிவிக்கலாமே. 1கொரிந்தியர் 15 : 58 ல் கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. இயேசுவுக்காக இயன்றதைச் செய்தார்கள்; இன்றளவும் பேசப்படுகிறார்கள். இன்று நாம் என்ன செய்கிறோம் இயேசுவுக்காக... சிந்திப்போம்! செயல்படுவோம்.
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864