Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.10.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 01-Oct-2024

இன்றைய தியானம்(Tamil) 01.10.2024

 

அபிகாயில்

 

"மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்" - நீதிமொழிகள் 15:1

 

பொழுது விடிவதற்குள்ளாக நாபாலையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சர்வ சங்காரம் பண்ணவேண்டும் என கொலைவெறியோடு கிளம்பிய தாவீதை யார் தடுக்க முடியும்? தாவீது மட்டுமா? தாவீதோடு 400பேர் கொண்ட பெருங்கூட்டத்தோடு வந்த எல்லோரையும் எப்படி சமாதானப்படுத்துவது? இதை ஒரு தனி ஆளாக, அபிகாயில் என்ற பெண் அவர்களை சமாதானப்படுத்தினாள் என வாசிக்கும்போது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? தேவன் தம்முடைய களத்தில் பெரிய காரியங்களை செய்வதற்கு பெலவீனமான பாண்டங்களை எங்ஙனம் உபயோகிக்கிறார் என்பதை இன்றைய செய்தியில் பார்க்கலாம்.

 

அபிகாயில் இப்பெயருக்குரிய அர்த்தம் "மகிழ்ச்சிக்குரியவர்" என்பதாகும். ஆனால் துஷ்ட கணவன் நாபாலின் நிமித்தம் அவள் மகிழ்ச்சியற்று இருந்திருக்கலாம். ஆனால் அவள் புத்திசாலியான பெண்ணாக காணப்பட்டாள். தன் கணவன் நாபால் தாவீதுக்கு செய்ததை கேள்விப்பட்ட அபிகாயில் பதறிப்போய் தாவீதோடு சமாதானத்திற்காக துரிதமாய் செயல்படுகிறாள். முதலில் உபச்சாரம் அதாவது வழியிலே விருந்துவைத்தல் என்கிற அணுகுமுறையில் வேலைக்காரர்களை தனக்கு முன்னே அனுப்பி தாவீதை சந்திக்கிறாள். கழுதையிலிருந்து வந்தவர்கள் யார்? எதற்காக தனக்கு உணவுகளையும், பண்டங்களையும் தருகிறார்கள் என தாவீது சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே அபிகாயில் தாவீதின் பாதத்திலே சாஷ்டாங்கமாய் விழுந்து பணிகிறாள். தனக்கு முன் முகங்குப்புற விழுந்த பெண் நாபாலின் மனைவி அபிகாயில் என அடையாளப்படுத்திக்கொள்ளும் முன், அபிகாயில் தன் மெதுவான சாந்தமுள்ள வார்த்தைகளால் தாவீதின் கடின இருதயத்தைக் கரையப்பண்ணினாள். அபிகாயிலின் சொற்கள் வெறும் வார்த்தை ஜாலங்களால் அல்ல. அதில் தேவனுடைய சத்தியமும் கிருபையும் நிறைந்து காணப்பட்டன. அபிகாயிலின் நடவடிக்கைகள் தாவீதை மட்டுமல்ல, உடன் வந்திருந்த எல்லோரையும் சாந்தப்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அன்பு கலந்த உபசரிப்பு, தாழ்மை நிறைந்த இருதயம், சாந்தம் நிறைந்த மெதுவான வார்த்தைகள் இவையெல்லாம் சேர்ந்து தாவீதுக்குள் காணப்பட்ட பழிக்குப்பழி, இரத்தஞ்சிந்த விரும்பும் கொலையுணர்வு எனும் பெருஞ்சுவரை இடித்து தரைமட்டமாக்கியது. ஆம், அபிகாயில் தன் சுபாவத்தால் கடினமான சூழ்நிலைகளை வென்றெடுத்தாள். புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். (நீதி. 14:1) அல்லேலூயா!

 

அபிகாயில் குடும்பத்தில் காணப்பட்டதை போன்றதொரு பிரச்சனை உங்களுக்கு இருக்குமென்றால் இன்றைய செய்தி உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருக்குமென விசுவாசிக்கிறேன். பிரச்சனைகளை நினைத்து அழுது கொண்டிராமல் தேவனுடைய உதவியோடு ஜெபித்து மேற்கொள்ள செயல்படுங்கள். அபிகாயிலுக்கு நன்மையுண்டாக வழிநடத்திய ஆண்டவர் உங்களையும் வழிநடத்துவாராக! அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்கும். ஆமென்.

- Bro. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:

இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al