By Village Missionary Movement
Monday, 30-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 30.09.2024
பின்னிட்டுப் பாராதே
"…கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்" - லூக்கா 9:62
டாக்டர் சார்லஸ் லாம்பி, சூடானில் மருத்துவ மிஷனெரியாக பணிபுரிந்தவர். இவர் 1917-இல் தன் சொந்த தேசமாகிய அமெரிக்காவிற்கு சென்றார். அப்பொழுது அவருடைய நெருங்கிய உறவினர் சார்லஸ் லாம்பியை மீண்டும் சூடான் செல்லாமல், அமெரிக்காவிலேயே இருந்து விடுமாறு வற்புறுத்தினார். சூடானில் இவ்வளவு நாட்கள் கடினமாய் உழைத்தது போதும், இனி இங்கு தங்கி என்னோடு என் மருத்துவமனையில் பணிபுரியுங்கள். சில வருடங்களில் என் மருத்துவமனையை உங்களுக்குத் தந்து விடுகிறேன் என்றார். இந்த அரிய வாய்ப்பைத் தவற விட்டு விடாதீர்கள் என்றார். சார்லஸ்க்கு ஒரே குழப்பம். மிஷனெரிகளுக்கு என்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். குழப்பம் மாறவில்லை. உடல் களைப்பினால் தூங்கிவிட்டார். அப்பொழுது அவருக்கு ஒரு சொப்பனம் வந்தது. அதில் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வரைபடத்திலிருந்து ஒரு தொழுநோய் பாதித்த கை இவரை நோக்கி வந்தது. இந்த கையை நான் பிடிக்கவா? என வேண்டா வெறுப்பாக பிடித்தார். அப்பொழுது அது ஆணி பாய்ந்த இயேசுவின் கரமாக மாறியது. உடனே சூடானில் பணி செய்யவே தேவன் என்னை அழைக்கிறார் என்று சொல்லி சூடானுக்கே ஊழியம் செய்ய சென்றார்.
மனிதர்களாகிய நமது இயல்பு என்னவென்றால் வாழ்வில் ஒரு சில காலகட்டத்தில் வரும் மனிதர்களின் வார்த்தைகள், சூழ்நிலைகள் நம்மை எளிதில் பின்னடையச் செய்துவிடுகிறது. தேவனின் பின் சென்ற சீடன் பேதுருவிடம், “இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்” என்று சொல்லி இருந்தும், இயேசு மரித்ததும் மீன்பிடிக்க சென்றார். அப்பொழுது தேவனுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால் திரும்பி செல்வதை விரும்பாத தேவன் அங்கு வந்து 153 பெரிய மீன்களை பிடிக்கும்படி செய்தார். எலியாவும் யேசபேலின் வார்த்தைக்குப் பயந்து தன் வேலையை விட்டு தனித்து பின் சென்று விடலாம் அல்லது மொத்தமாய் ஜீவனை விட்டுவிடலாம் என கர்த்தரின் முன்பாக நின்ற எலியா அவர் பாதத்தை விட்டு ஓடினார். அங்கும் தேவன் தூதனை அனுப்பி பேசினார். அவரைக் கொண்டு செய்ய உள்ள திட்டத்தை கூறி தேற்றினார்.
பிரியமானவர்களே, நீங்கள் செய்யும் வேலை, தொழில், பதவி இது எதுவுமே நீங்களாய் தேடிக்கொண்டதல்ல, தேவனே உங்களுக்கு தந்தவை. இவற்றில் உண்மையாய் இருங்கள். பாதியில் விட்டு செல்லாதிருங்கள். ஏமாற்றம் தோல்வி வருவது போல் இருந்தாலும் நீங்கள் உண்மையாய் இருக்கும்போது நாம் வேண்டிக் கொள்கிறதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாக செய்கிற தேவன் அப்படியாய் செய்து அநேகருக்கு பயனுள்ளவர்களாய் நம்மை மாற்றுவார் என்பது அதிக நிச்சயம். உங்கள் பணியிடத்தில் வீட்டிற்கு அருகில் நீங்கள் செய்யும் ஊழியம் சிறிதாயினும் மனம் தளராமல், பின்வாங்காமல் செய்யுங்கள். தேவன் சிறு ஊழியத்தையும் உண்மையாய் செய்யும்போது ஆசீர்வதித்து பெருகச் செய்வார்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
சட்டீஸ்கரில் உள்ள நம் ஊழியர்களின் குடும்பத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864