By Village Missionary Movement
Wednesday, 25-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 25.09.2024
பயம்
"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" - 2 தீமோத்தேயு 1:7
உலகில் சிறியோர் முதல் பெரியோர் வரை பல காரியங்களுக்காக பயப்படுகின்றனர். இருள் பயம், டிராபிக் பயம், வியாதி படிப்பு, வேலை, எதிர்காலம், மரண பயம் என சொல்லிக் கொண்டே போகலாம். ஹோவார்ட் என்ற தேவ பக்தர் கூறுகிறார், "கிறிஸ்துவின் வேத போதனையே நம்மை பயம், வெறுப்பு, வஞ்சகம் போன்ற வலிமையான கொடூரங்களில் இருந்து நம்மை காக்கும்" என்று. ஒரு இளம் ஊழியர் தனக்கு வந்த வியாதியினிமித்தம் மிகுந்த உடல் வலி, வேதனையினால் துடித்துப் போனார். எத்தனையோ மருந்துகள் எடுத்தும் பயனில்லை. ஒரு வித பயம் அவரை ஆட்கொண்டது. என்னவென்றால் இதே வியாதி விடாமல் இருந்து விடுமோ! நீண்ட நாட்கள் உடல் வேதனையில் அவதிப்பட வேண்டி இருக்குமோ என எண்ணி பயந்தார். உடனே ஜெபம் செய்தார். இயேசுவே, என்னை விடுதலையாக்கும் அல்லது என்னை உம்மண்டை எடுத்துக் கொள்ளும் என முற்றிலுமாய் தன்னை அர்ப்பணித்து ஜெபித்தார். உடல் வேதனையைத் தாங்க பெலன் கிடைத்தது. பின், சில நாட்களில் வியாதியிலிருந்து விடுதலையும் கிடைத்தது.
இதே போல் தான் வேதத்திலும் எசேக்கியா ராஜா வியாதிப்பட்டார். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் நீ மரித்துப் போவாய் வீட்டு காரியத்தை ஒழுங்குபடுத்தும் என்கிறார். ஆனால் எசேக்கியா இதைக் கேட்டதும் ஏசாயா தீர்க்கதரிசியிடமோ அல்ல தனக்குள்ளோ புலம்பி அழாமல் சுவர்புறமாய் திரும்பி கர்த்தரை நோக்கி பார்த்து அழுதார். தேவன் உடனே செயல்படுகிறார். அவருடைய வியாதிக்கான மருந்தையும் கூறி வியாதிப் படுக்கையை மாற்றுகிறார். அடையாளமாய் பத்து பாகை கடிகாரம் பின்னிட்டு திரும்ப செய்து பலத்த காரியங்களை செய்கிறார். நாம் உலகத்தில் இருக்கும் போது பயம் வருவது இயற்கை. ஆனால் பயம் வந்ததும் பிரச்சனையை, குழப்பத்தை, வியாதியை பாராமல் அவைகளை மனிதரிடம் சொல்லி புலம்பி அழாமல் தேவனிடம் உடனே சென்று விட்டால் அதற்கான தீர்வு கிடைத்து விடும். நம் தேவனின் வல்லமைக்கு முன்னால் நம்மை பயப்படுத்தும் காரியங்கள் ஒன்றும் இல்லை.
இதை வாசிக்கும் அன்பரே, இருளை வெளிச்சமாக்குகிற கர்த்தர் நம்மோடு கூடவே இருக்கிறார். அவரை அருகில் வைத்துக் கொண்டு பயம் என்கிற இருளுக்குள் வாழவேண்டியதில்லை. எனவே அவரைப் பற்றிக் கொண்டு இருளை வெளிச்சமாக்குங்கள். பயத்தை உங்களை விட்டு அகற்றி போடுங்கள். அவரைப் பற்றிக் கொள்ளும் போது தேவன் நம் வாழ்வில் தம் வல்லமையை விளங்கச் செய்வார். இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் செயல்படுவார் பயப்படாதே என்று எத்தனையோ வாக்குத்தத்தங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வாக்குத்தத்தத்தைப் பற்றி கொண்டு பயம் வரும்போது தேவனின் பாதத்தில் விழும் போது தேவன் பயத்தை அகற்றுவார். அல்லேலூயா !
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
நம் அலுவலகப் பணிகளுக்காக, அலுவலக ஊழியர்களின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864