By Village Missionary Movement
Tuesday, 27-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 27-04-2021
மறைக்காதே
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” - நீதிமொழிகள் 28:13
தங்கள் வீட்டிலிருந்த 10 வாத்துகளை மேய்க்க வேண்டியது கலா மற்றும் அவள் தம்பி சுந்தரின் பொறுப்பு. ஒரு நாள் சுந்தர் கல்லை எடுத்து விளையாட்டாக எறிய, அது ஒரு வாத்தின் தலையில் பட்டு செத்துப் போனது. ஐயோ! அப்பாவிற்குத் தெரிந்தால் அடிப்பாரே என்று சுந்தர் கலாவிடம், “அக்கா நீ அப்பாவிடம் சொல்லிவிடாதே” எனக் கூறினான். கலா, “நான் சொல்றத எல்லாம் செஞ்சா நான் சொல்லமாட்டேன்” என்றாள். மறுநாள் வீட்டில் கலா தனது வேலையான துணி துவைப்பதை சுந்தர் செய்யுமாறு கூறினாள். நான் செய்யமாட்டேன் என சுந்தர் கூற கலா, “டேய் வாத்து” என மிரட்டினாள். இப்படியே தனது அனைத்து வேலைகளையும் சுந்தர் மூலம் செய்து முடித்தாள். சுந்தர் தன் குற்றத்தை மறைத்து, மறைத்து அநேக வேலைகளை செய்ததில் காய்ச்சலே வந்துவிட்டது. முடிவில் சுந்தர் நடந்ததைக் கூற அவனது அப்பா இவ்வளவுதானா என்னிடம் சொல்லி இருக்கலாமே என்று அவனை மன்னித்தார். இதை அறியாத கலா, “டேய் எல்லா வேலையும் செய்” எனக் கூற சுந்தர் மறுதலித்தான். உடனே கலா, “டேய் வாத்து, பாத்து” என்று சொல்ல சுந்தரோ, “வாத்து அது எல்லாம் நேத்து” எனக் கூறிவிட்டு மகிழ்ச்சியோடு விளையாடச் சென்றான். ஆம், நாம் செய்யும் தவறுகளை இயேசப்பாவிடம் அறிக்கை செய்தால் நல்லது. மறைத்தால் ஆபத்து. அறிக்கை செய்யும் போது விட்டுவிட வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக நிச்சயமாகவே வரும்.
தாவீது தான் செய்த பாவத்தை உணர்ந்த உடனே அதை மறைக்காமல் அப்படியே அறிக்கை செய்கிறதை இன்றைய வேத பகுதியில் வாசிக்கிறோம். இராஜா என்ற தன் அந்தஸ்தை வைத்து தான் செய்த தவறை மறைக்காமல் அப்படியே உள்ள வண்ணமாகக் கூறி அறிக்கையிடுகிறார். ஆண்டவர் மாத்திரமே பாவத்திலிருந்து விடுதலை தர முடியும் என உணர்ந்த தாவீது “நீர் என்னைக் கழுவி சுத்திகரியும்” என அறிக்கையிடுகிறார். கர்த்தாவே உமக்கு விரோதமாக பாவஞ்செய்தேன் என அறிக்கையிடுகிறார். இரத்தப் பழிக்கு என்னை நீங்கலாக்கும் என இருதயம் நொறுங்குண்டவராய் கெஞ்சுகிறார். அதோடு மாத்திரமல்ல மனம் திருந்தியவராய் வாழ சுத்த இருதயத்தை எனக்குத் தாரும் எனக் கேட்கிறார். அதனால் அவர் மன்னிப்பைப் பெறுகிறார்.
இதை வாசிக்கிற நாமும் பாவத்தை மறைத்து வைக்காமல் அதனை அப்படியே தேவனிடம் அறிக்கை செய்து மீட்பைப் பெறுவோம். பாவத்தை மறைத்தோமானால் குற்ற உணர்வுடன் துன்பத்தை அனுபவிக்க வேண்டியது தான். இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே நம் பாவத்தை மன்னிக்கிறவர், அவரிடம் மறைக்காமல் அறிக்கை செய்வோம், இரக்கம் பெறுவோம்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்தை காணிக்கையினால் தாங்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் அபரிவிதமாக ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250