By Village Missionary Movement
Saturday, 31-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 31.08.2024
எலும்புருக்கி
"சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி" - நீதிமொழிகள் 14:30
சிற்பி ஒருவன் மிக சிறப்பான சிலை ஒன்றை செய்து மக்களின் பார்வைக்காக வைத்தான். அதன் அருகில் சிலையை குறித்து பார்வையாளர்கள் தங்கள் கருத்தை எழுதும்படி ஒரு கரும்பலகையும் வைத்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதின் கலை நுணுக்கத்தை வியந்து, சிற்பியை புகழ்ந்து எழுதினார்கள். ஆனால் அங்கே இன்னொரு சிற்பி ஒருவன் வந்தான். மனதில் நிரம்பியிருந்த பொறாமை அவனுடைய கண்களை குறை கண்டுபிடிக்க ஏவியது. எனவே பல மணி நேரங்கள் சிலையை மிக கவனமாக சோதித்தான். இறுதியாக அதில் ஒரு குறையை கண்டுபிடித்தான். அந்த சிறிய குறையை பெரிய எழுத்துக்களாக அந்த கரும்பலகையில் எழுதினான். அதன் பின்னர் அங்கே வந்தவர்கள் எல்லாம் அந்த குறையையே கவனமாக பார்த்தனர். சிலையின் அழகு அவர்களுக்கு தெரியவில்லை.
வேதாகமத்தில் யோசேப்பின் மேல் சகோதரர்கள் பொறாமை கொண்டதை பார்க்கலாம். யாக்கோபின் முதிர் வயதில் யோசேப்பு பிறந்ததினால் மற்ற குமாரர்களைக் காட்டிலும் அதிகமாக அவனை நேசித்து பலவருணமான அங்கியை கொடுத்தார். அவன் கண்ட சொப்பனத்தின் நிமித்தம் அவன் மேல் பொறாமை கொண்டு அவனைக் கொன்று போடலாம் என்று யோசித்தார்கள். பின்பு இஸ்மவேலர் கையில் 20 வெள்ளிக்காசுக்கு விற்று போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்கு கொண்டு போனார்கள். எகிப்திலே மீதியானியராகிய பார்வோனின் பிரதானியாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். கர்த்தர் யோசேப்போட இருந்தார். அதினால் எகிப்திற்கு அதிகாரியாக மாற்றினார். பொறாமை - யோசேப்பை தகப்பனை விட்டு, வீட்டை விட்டு, தேசத்தை விட்டு போக காரணம் ஆயிற்று. ஆயினும் எல்லாம் தேவனுடைய சித்தமாயிருந்தது. மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்வது உலகெங்கும் இருக்கிறது. அயலானைப் பார்த்து பொறாமை கொள்வது சரியல்ல. மற்றவர்கள் வாழ்க்கையை பார்த்தோ, மற்றவர்களிடம் உள்ள ஆசீர்வாதங்களைப் பார்த்தோ நாம் பொறாமை படக்கூடாது. வேதவசனம் இவ்விதமாக சொல்லுகிறது, பொறாமையோ எலும்புருக்கி (T.B). காச நோய் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் இருந்தே உடல் ஆரோக்கியத்தை கெடுத்து உள் உறுப்புகளை அரித்துவிடும். பொறாமையை இதோடு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது.
இதை வாசிக்கின்ற நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம். நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்று வருந்துவதை விட, மற்றவர்க்கும் அது கிடைக்கவில்லை என்று நாம் சந்தோஷப்படும் பொறாமை குணம் நம்மிடம் உண்டோ என்று பார்த்து நம்மை நாமே சரி செய்து கொள்வோம்.
- C. பால் ஜெபஸ்டின்
ஜெபக்குறிப்பு:
கைப்பிரதி ஊழியங்களின் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864