By Village Missionary Movement
Thursday, 22-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 22.08.2024
நான் எப்படிப்பட்டவன்(ள்)
"நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” - 1 கொரிந்தியர் 11:31
தேவன், வேதத்திலே கற்பனைகளையும், கட்டளைகளையும் கொடுத்து, இதை நீ செய்ய வேண்டும், இதை நீ செய்யக் கூடாது என்று கண்டிப்போடு கூறிவிட்டார். இப்படி ஒரு கற்பனை செய்வோம். ஆண்டவர் இப்படி சொல்லுகிறார், "நீ என் மீது அன்பு வைத்திருந்தால் நான் சொல்வதற்குக் கீழ்ப்படி: அது உனக்கு ஆசீர்வாதம். இல்லையென்றால் என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் தண்டனை எதுவும் கிடையாது" என்று கூறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது நம் சிந்தனை, பார்வை, பேச்சு, செயல்கள் எப்படியிருக்கும்? ஒரு நிமிடம் மனச்சாட்சியைத் திறந்து நம்மை நாமே நிதானித்துப் பார்க்கலாம். நான் எப்படிப்பட்டவனாயிருப்பேன்? தண்டனையில்லை என்பதற்காக பாவம் என்று தெரிந்தும் அதைத் துணிந்து செய்வேனா? அல்லது என் இயேசுகிறிஸ்து சொல்லிவிட்டார் என்று அவர் மேலுள்ள அன்பினால் அதை நான் செய்யாமலிருப்பேனா?
பரி.வேதாகமத்தில் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரின் வீட்டிலிருந்தான் யோசேப்பு. அங்கு அவனுக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டு எல்லாம் கீழ்ப்பட்டிருந்தது. போத்திபாரின் மனைவியைத் தவிர! சிலநாள் சென்ற பின் போத்திபாரின் மனைவி இவன் இளைஞனும் சௌந்தரியமுமுள்ளவன் என்று கண்டு, இவன் மேல் கண் போட்டு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தவறான உறவுக்கு நித்தம் நித்தம் அழைக்கிறாள். இவன் விலகிவிலகி செல்கிறான். ஒருநாள் இதே போன்று அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து அழைக்கும் போதும் யோசேப்பு வஸ்திரத்தை விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.
இதுபோல ஏதாவது ஒரு பாவச்சூழல் நம்மை நெருக்கினால் நாம் எப்படியிருப்போம்? இல்லாவிடில் நாமே பாவத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறோமா? எனக்குப் பிரியமான தேவஜனமே! நியாயப் பிரமாணம் கொடுக்கப்படாத அந்த காலத்திலேயே யோசேப்பு தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகி ஓடினான். நியாயப்பிரமாணம் மட்டுமல்ல இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளும் கட்டளைகளுமடங்கிய முழு வேதாகமமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி அவருக்குப் பிரியமாய் வாழ்ந்தால் நமக்கு பரலோகம். இல்லாவிட்டால் நரகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் ஆண்டவருடைய வார்த்தையில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது. இதையெல்லாம் அறிந்தும் நான் எப்படிப்பட்டவனாயிருக்கிறேன்? சிந்திப்போம்!! சீர்படுவோம்!!
- A. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
CCC திட்டத்தில் இணைந்துள்ள சிறுவர்களின் படிப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864