By Village Missionary Movement
Wednesday, 07-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 07.08.2024
சோர்ந்து போகாமல்
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,…" - ஏசாயா 40:29
அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ மருத்துவமனை. யுத்த களத்தில் காயப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு மரணத் தருவாயில் இருந்த ராணுவ வீரன் ஒருவனது அருகில் போதகர் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். கண் விழித்த வீரன் போதகரிடம் தனக்கு ஒரு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டான். போதகரும் கட்டாயம் செய்கிறேன் என்றார். மெதுவாக தனது பேண்ட் பையில் இருந்து ஒரு சிறு விலாச புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிக்காட்டி இது என் ஞாயிறு பள்ளி ஆசிரியருடையது. இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்றுக் கொடுத்த வேத வசனத்தின் படி நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்க இருக்கிறேன். என்னை இரட்சகரிடம் வழி நடத்திய உங்கள் பணிக்காக நன்றி கூறுகிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார். ஞாயிறு பள்ளி ஆசிரியரிடம் இருந்து பதிலும் வந்தது.
அவரது கடிதத்தில், "மகனே போன மாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை விட்டுவிட்டேன். ஏனெனில் நான் கற்பித்துக் கொடுத்ததில் எந்தவித பயனுமில்லை என்பதாக உணர்ந்தேன். ஆனால் உன்னுடைய கடிதம் சோர்ந்து போய் இருந்த என்னை உயிர்ப்பித்தது. என்னுடைய விசுவாச குறைவிற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும் இவ்வூழியத்தைச் செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது சோர்வை நீக்கி உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்" என எழுதியிருந்தார்.
வேதத்திலே எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்கு பயந்து வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய் ஒரு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்" என்று சொல்லி சூரைச்செடியின் கீழேபடுத்துக்கொண்டு நித்திரை பண்ணினான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி நீ பண்ண வேண்டிய பிரயாணம் வெகு தூரம் என்றான். சோர்ந்து போய் இருந்த எலியா தேவ வார்த்தைகளை பெற்றவுடன் தேவதரிசனத்தை நோக்கிச் சென்றார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! சோர்வு என்பது நம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஆனால் அந்த சோர்விலேயே இருந்து நாம் முடங்கிவிட தேவன் விரும்புவதில்லை. நம்மை உற்சாகப்படுத்தி மீண்டும் நம் பணியைத் தொடர விரும்புகிறார். ஒரு வேளை நீங்கள் ஆத்தும ஆதாயப் பணி செய்து சோர்ந்து போய் உள்ளீர்களா? அநேக நாட்களாக நான் பணி செய்தும் ஒரு பலனும் இல்லையே என்று சோர்வுற்று இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். இதற்குறிய பலனை பரலோகத்தில் நாம் காணலாம். தேவ வார்த்தையின் மீது நம்பிக்கை வையுங்கள் ஏனென்றால் கர்த்தரிடமிருந்து சோர்ந்து போகிறவர்களுக்கு புதுப்பெலன் கிடைக்கும். அது மட்டுமின்றி சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப் பண்ணுவார்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
இம்முகாமிற்கு வாலிபர்களை அழைத்து வரும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை இயக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864