By Village Missionary Movement
Saturday, 03-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 03.08.2024
தேவனை ஏமாற்றுகிறோமா?
"ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ?..." - கலாத்தியர் 3:3
குதிரைகளை விலைக்கு விற்கும்போது ஒரு முக்கியமான முறையைப் பின்பற்றுவார்கள். குதிரைகளை விற்கும் முன்பாக இரண்டு மூன்று நாட்கள் தண்ணீர் குடிக்கக் கொடுக்காமல் தாகத்தோடு விட்டுவிடுவார்கள். குதிரைகள் மிகவும் தாகத்துடன் இருக்கும். வாங்குபவர்கள் முன்னிலையில் தண்ணீரால் நிரப்பப்பட்ட தொட்டிகள் இருக்கும். அப்பொழுது அந்தத் தாகமுள்ள குதிரைகளை அவிழ்த்துவிடுவார்கள். தாகத்தோடு இருக்கும் குதிரைகள் தண்ணீரைப் பார்த்தது மிகவும் வேகமாக தண்ணீரை நோக்கி ஓடும். அப்பொழுது அதை வளர்த்தவர்கள் விசில் அடிப்பார்கள். தண்ணீரை நோக்கிச் செல்லும் குதிரை வளர்த்தவருடைய விசில் சத்தத்தைக் கேட்டு நின்று வளர்த்த அந்த நபரிடம் திரும்பிச் சென்றுவிடும். இப்படி எந்தக் குதிரை தன்னுடைய தாகத்தையும் அடக்கிக்கொண்டு தன்னுடைய எஜமானுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகிறதோ அந்தக் குதிரையை சிறந்த குதிரையாக விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். அந்தக் குதிரையே எஜமானனுடைய நம்பிக்கைக்குரிய குதிரையாக மாறும்.
வேதத்திலும் தரிசனம் பெற்ற யோசேப்பு எத்தனையோ நெருக்கங்கள், போராட்டங்கள், நிந்தைகள், தவறான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தேவன் தன்னோடு இருப்பதை உணர்ந்திருந்தார். தன்னுடைய காரியங்களை அவர் பார்த்துக்ககொண்டுதான் இருக்கிறார் என்ற தைரியமுடையவராய், நன்றியுடையவராய் இருந்தததால்தான் பாவச் சோதனை வரும்போது, "தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி?" (ஆதி. 39:9) என்று தன் வஸ்திரத்தையும் விட்டு ஓடிப்போனான். சோதனையில் ஜெயித்து தேவனைச் சந்தோஷப்படுத்தினான். எதிர்பார்ப்புடன் இருந்த தேவன் ஏமாறவில்லை. கண்டிப்பாகச் சந்தோஷப்பட்டிருப்பார். யோசேப்பை உன்னத நிலைக்கு உயர்த்தினார்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரனே! சகோதரியே! தேவன் ஒவ்வொரு நாள் காலையிலும் எதிர்பார்ப்போடு புதுக்கிருபையால் நம்மை நிரப்புகிறார். ஜீவனைத் தந்து வாழ வைக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பு, அவருக்காகச் செயல்பட விரும்புகிறார். ஆனால் நாமோ நமக்கு இஷ்டமான காரியங்களைச் செய்து நமக்கு நாமே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோமா? அல்லது அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்து அவரைச் சந்தோஷப்படுத்து கிறவர்களாயிருக்கிறோமா? சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நான் ஜெபிக்கிறேன். வேதம் வாசிக்கிறேன் என்று கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை காரியங்களைச் செய்துவிட்டு, பெரிய சாதனையை செய்துவிட்டதாக எண்ணுகிறோம். குழந்தைத்தனமான சாக்கு போக்குகளைச் சொல்லி நின்றுவிடாமல் அவருக்காகப் பேச, செயல்பட தேவன் மனிதர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். இன்றைய நாளை, தேவன் நமக்குக் கொடுத்த நேரங்களைத், தேவனுக்காக செலவு செய்து தேவனைச் சந்தோஷப்படுத்திய யோசேப்பைப் போல இருக்கப்போகிறோமா? அல்லது புசிக்க வேண்டாமென்று சொன்ன பழத்தைப் புசித்து, தவறான தெரிந்தெடுப்புகளைச் செய்த ஆதாம் ஏவாளைப் போல தேவனைத் துக்கப்படுத்தப்போகிறோமா? Choice நம் கையில், என்ன செய்யப்போகிறோம்?
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
இம்முகாமில் பாடப்படும் பாடல்கள், சாட்சி வேளை மற்றும் ஆராதனை மூலம் வாலிபர்களின் உள்ளங்கள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864