By Village Missionary Movement
Saturday, 27-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 27.07.2024
காயங்களை ஆற்றுவார்
“…உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” - எரேமியா 30:17
புத்த மதத்தைச் சேர்ந்த ஓருவர், மிகவும் வியாதியோடு இறக்கும் தருவாயில் இருந்த போது ஓரு சிறு பெண் தினமும் அவரை சந்தித்து இயேசு உங்களை நேசிக்கிறார், உங்களை குணமாக்குவார் என கூறி வந்தாள். மிகவும் கோபமடைந்த அவர், "கிறிஸ்தவ நாயே வெளியே போ" என கூறி ஒவ்வொரு நாளும் திட்டி விரட்டுவார். ஒரு நாள் வேதாகமத்தோடு வந்து நின்றாள். அதனை வாங்கி கிழித்து விட்டார். மறுநாளும் ஒரு வேதாகமத்தோடு வந்து நின்றாள். நீ சிறுமியாய் இருப்பதால் விடுகிறேன் என சொல்லி வேதத்தை வாங்கி வைத்து விட்டு அனுப்பினார். பின்பு சிறிது நேரம் கழித்து அதை எடுத்து என்ன அதில் என்ன இருக்கிறது தினமும் கொண்டு வருகிறாளே என வாசிக்கத் தொடங்கினார். பின்பு சுகம் பெற்று எழும்பினார். அவர் தான் தென் கொரிய தேசத்தின் எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய பாத்திரமான பால்யாங்கி சோ.
தேவனின் வார்த்தை மனதின் காயங்களை ஆற்றுகிறது. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் என சங்கீதம் 14:3 ல் வேதம் கூறுகிறது. மேலும் அவர் மனதின் காயங்களை ஆற்றுகிறவர், குணமாக்குகிறவர் மட்டுமல்லாது நம் சரீர பெலவீனங்களையும் ஆற்றி குணமாக்குகிற கர்த்தர். எட்டு வருஷமாய் படுத்த படுக்கையாய் திமிர்வாதமாய் இருந்த மனுஷனைப் பார்த்து பேதுரு, "இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார் என்று சொல்லி எழுந்து உன் படுக்கையை நீயே போட்டுக் கொள்" என்றார். எட்டு வருடமாய் படுத்திருந்தவன் உடனே எழுகிறான். அதே போல் தொற்காள் என்னும் பேருள்ள ஒரு சீஷி இறந்து போனதும் பேதுரு இயேசுவின் நாமத்தில் உயிர் பெறச்செய்கிறார். ஆண்டவர் தமது வார்த்தையை அனுப்பி குணமாக்குகிறார். கர்த்தரின் வார்த்தையை அதிகம் வாசிக்கும் போது அவற்றை உரிமையாக்கிக் கொள்ளும் போது அவை நம் வாழ்வில் நடைமுறையாகிறது.
பிரியமானவர்களே! மனதில் காயத்தோடு, உடலில் வேதனைகளோடு தவிக்கிறீர்களா? கர்த்தரின் வார்த்தை உங்களை ஆற்றும், கர்த்தரின் வார்த்தையாகிய வேதத்தை அதிகமாய் வாசித்து அவைகளால் உங்கள் உள்ளத்தை நிரப்புங்கள். ஒரு வேளை உங்கள் இருதயம் இன்று உடைந்து நொறுங்கி இருக்கலாம். நம்மை உள்ளங்கையில் வரைந்த தேவனிடம், உடைந்த உள்ளத்தை கொடுங்கள், காயப்பட்ட இருதயத்தை கிறிஸ்துவின் தழும்புள்ள கரத்தில் கொடுங்கள், நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்34:18) காயப்பட்ட இருதயத்தை கிறிஸ்துவின் தழும்புள்ள கரத்தில் கொடுங்கள். அப்பொழுது ஆறாத காயங்கள் ஆறும். கசப்புகள் காணாமல் போகும், சமாதானத்தால் உள்ளம் நிரம்பும்.
- Sis. ஜாய் கிரேஸ்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனை மூலம் அநேகர் அற்புத சுகம்பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864