Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 29.03.2025

இன்றைய தியானம்(Tamil) 29.03.2025

 

சர்ப்பம்

 

"தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது…" - ஆதி. 3:1

 

வேதாகமம் சர்ப்பத்தை முழு உலகத்தையும் ஏமாற்றும் சாத்தானாக அடையாளம் காட்டுகிறது. சர்ப்பத்தை தேவன் காட்டு ஜீவனாக உண்டாக்கினார். மனுக்குலத்தின் துவக்கத்திலேயே ஆதாம் ஏவாளை தந்திரமாக ஏமாற்றும்படி ஏதேனுக்குள் நுழைந்தது. நன்மை-தீமை அறியத்தக்க, கடவுளால் தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை சாப்பிட ஏவாளைத் தூண்டியது. இது மனிதகுல வீழ்ச்சிக்கும் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும், ஏவாளும் வெளியேற்றப்படுவதற்கும் வழி வகுத்தது.

    

சர்ப்பம் பெரும்பாலும் சோதனை, வஞ்சகம், தந்திரத்தின் அடையாளமாக காணப்படுகிறது. வெளி. 12:9, 20:2 ல் கடவுளின் விருப்பத்தை எதிர்க்கும் சக்தியாகவும், உலகை தந்திரமாய் ஏமாற்றும் தன்மையுடையதாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. சர்ப்பத்தின் தன்மையுடன் ஒப்பிடக்கூடிய வேதாகம மனிதர் இருவர். அவர்கள் யூதாஸ் மற்றும் ஏரோது மன்னன். யூதாஸ் துரோகம், வஞ்சகத்துக்கு அடையாளமாகிறார். ஏரோது மன்னன் தந்திரம், வஞ்சகப் பேச்சு போன்ற சர்ப்பத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறான். தன்னுடைய அதிகாரத்தை, ஆட்சியைக் கைப்பற்ற சிறு குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு துணிந்தவர் ஏரோது.

         

மத்தேயு10:16 இல் இயேசு ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள் என்று கூறினார். நாம் உலக வாழ்க்கையிலே, பாம்பின் ஞானத்துடனும், புறாவின் கபடற்ற தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார். இயேசுவைப்போல யோவானும் சர்ப்பத்தைப் பற்றிய நேர்மறையானக் கருத்தை, இயேசு கிறிஸ்துவுக்கு இணையாக உருவகப்படுத்துகிறார். யோவான் 3:14 ல் சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல, மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும் என்று மோசேயினால் வனாந்தரத்தில் செய்யப்பட்ட வெண்கல சர்ப்பத்துக்கு இணையாக, இயேசுவை குறிப்பிடுகிறார். வெண்கல சர்ப்பத்தை ஏறிட்டுப் பார்த்த பாம்பால் கடிபட்ட மனிதர்கள் பிழைத்தது போல, பாவத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இயேசுவை நோக்கிப் பார்க்க பிழைப்பார்கள் என்பதே யோவானின் கருத்தாகிறது. 2இராஜாக்கள்18:4 ல் மோசேயினால் செய்யப்பட்ட சர்ப்பத்தை எசேக்கியா அரசர் காலம் வரை இஸ்ரவேல் மக்கள் வணங்கியதையும் அதை அவர் உடைத்துப் போட்டதையும் காண்கிறோம். எனவே சர்ப்பத்தை சூழலுக்கு ஏற்றார் போல் திருமறையை எழுதியவர்கள் பயன்படுத்தினார்கள் என்று பார்க்கிறோம். எது எப்படி இருப்பினும் கடவுளின் படைப்பில் எவ்வுயிர்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே போல் தான் சர்ப்பம் தீமைக்கும், ஞானத்திற்கும் அடையாளமாக இரு வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. நாமும் உண்மையான இயேசு கிறிஸ்துவின் சீடர்களாய் தீமையை விலக்கி ஞானத்துடன் செயல்பட கடவுள் அருள் புரிவாராக!

- Mrs. பெர்லின் செல்லாபாய்

 

ஜெபக்குறிப்பு:

மாதந்தோறும் 30 வீடுகளில் 30 வீட்டு ஜெப கூட்டங்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)