இன்றைய தியானம்(Tamil) 28.03.2025
இன்றைய தியானம்(Tamil) 28.03.2025
சிறையிருப்பை மாற்றும் தேவன்
"சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்" - சங்கீதம் 14:7
இவ்வுலக வாழ்க்கையிலே நாம் பலவிதமான உபத்திரவங்களினாலும், பாடுகளினாலும் கலங்கி, இந்த பாடுகள் எப்பொழுது நீங்கும் என்று எண்ணித் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பாடும் ஒரு சிறையிருப்பைப்போலக் காணப்படுகிறது. வயதானவர்களுக்கு நோய் என்னும் சிறையிருப்பு, ஆதரவற்ற நிலையில் தவிப்போருக்கு பாதுகாப்பின்மை என்ற சிறையிருப்பு, பெற்றோர்களுக்கு குழந்தைகளின் கீழ்ப்படியாமை என்பது ஒரு சிறையிருப்பு போல் காணப்படும். வாலிபப் பிள்ளைகளுக்கு பல சிறையிருப்புகள், மதுபானம், போதைபொருட்களுக்கு அடிமையாதல் என்ற சிறையிருப்பு. கைபேசியில் உள்ள இணையதளம் செயலிகளினால் whatsapp, facebook, twitterபோன்ற பலவற்றில் சிக்கி சிறையிருப்பில் இருப்போர் கணக்கற்றோர். கணவன் மனைவிக்கு இடையே பிரிவினைகள், குழப்பங்கள், இணைந்து வாழ முடியாத பல பிரச்சனைகளில் இருப்போரும் சிறையிருப்பில் இருக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றை எப்படி கடன் இல்லாமல் நடத்துவது என்ற சிறையிருப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? இவற்றுக்கு தீர்வுதான் என்ன?ஆண்டவர் மட்டுமே இந்த சிறையிருப்புகளை மாற்ற முடியும்.
யோசேப்பு சிறையிருப்பில் எகிப்து தேசத்தில் 13 வருடங்கள் இருந்தார். தேவன் அவனை அப்படியே விட்டுவிடுவாரா? இல்லையே, அவன் சிறையிருப்பை ஏற்ற காலத்தில் மாற்றி அந்த தேசத்திற்கே அதிகாரியாக, பார்வோனுக்கு அடுத்து அதிபதியாக உயர்த்தினாரே. ஏற்ற காலத்தில் அவனை உயர்த்தினார். அதற்கு பொறுமையும், ஆண்டவரின் மேல் நம்பிக்கையும் தேவை. யோபுவை பாருங்கள், சாத்தானின் சோதனையால் ஒரே நாளில் அவன் ஆஸ்தி முழுவதும் அழிந்தது; அவனுடைய 10 பிள்ளைகளும் ஒரே நாளில் மரித்தார்கள். எவ்வளவு கொடிய வேதனையும் சிறையிருப்பும் அவனுக்கு நேரிட்டது? அது மட்டுமல்ல, அவன் சரீரம் முழுவதும் பருக்களால் நிறைந்து, ஒரு ஓட்டை எடுத்து அவைகளை சுரண்டிக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் அவன் தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்படி ஏவினாள். தாங்க முடியாத சிறையிருப்பில் இருந்தார் யோபு. எனினும் சில நாட்களே அந்த சிறையிருப்புகளும் துன்பங்களும் இருந்தன. சோதனை நாட்கள் முடிந்த பின் தேவன் யோபுவை இரண்டத்தனையாய் ஆசீர்வதித்தார். தாவீதும் பல வருடங்களாக சவுலினால் துரத்தப்பட்டு கொண்டே இருந்தான். ஆனாலும் கர்த்தர் தாவீதை சவுலின் கைகளில் ஒப்புக்கொடுக்கவில்லை. தாவீதின் சிறையிருப்பை மாற்றின தேவன் தாவீதை சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக உயர்த்தினார்.
அன்பு சகோதர சகோதரிகளே! நீங்களும் சிறையிருப்பில் இருக்கிறீர்களா? குடும்பப் பிரச்சினைகள், பிள்ளைகளுடைய படிப்பு, திருமண வாழ்க்கை, எதிர்காலத்தை குறித்த பயம், ஆகிய எந்த சிறையிருப்பானாலும் தேவனால் மாற்ற முடியும். அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார். சங்கீதம் 18 :19
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
ஒரு லட்சம் வேதாகமங்கள் கொடுப்போர் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864