Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 06.07.2024

இன்றைய தியானம்(Tamil) 06.07.2024

 

கனி கொடுக்கும் வாழ்வு

 

"...நீங்கள் போய் கனிக்கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்" - யோவான் 15:16

 

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நாம் தேவனை ஏற்றுக்கொண்டோமென்று. ஆனால் உண்மை அதுவல்ல, தேவாதி தேவனாகிய அவரே நம்மை தெரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். எதற்காக? நாம் கனி கொடுக்கும்படியாகவும், அந்த கனி நிலைத்திருக்கும்படியாகவும் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

கனி கொடுக்கும் வாழ்க்கை என்றால் என்ன? அவருடைய வேத வசனங்களுக்கு கீழ்ப்படிந்து அவருடைய சுபாவங்கள் வெளிப்படும்படியாய் அவருடைய சாயலை பிரதிபலிக்கிறவர்களாக மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழ்வதே. முக்கியமாக அவருடைய சுபாவங்களான அன்பு, நீடிய பொறுமை, தயவு, இரக்கம், பரிசுத்தம், சாந்தம் ஆகிய குணங்கள் நம் வாழ்வில் காணப்பட வேண்டும். தேவன் நம்மில் அன்பு கூர்ந்து தன் ஜீவனையே நமக்காக கொடுத்தாரே. இப்படிப்பட்ட விலைமதியாத "தேவ அன்பு" நம் உள்ளத்தில் ஊற்றப்பட்டிருக்கிறதா?

 

நாம் நம் குடும்பத்தாரை இவ்விதமான அன்புடன் நேசிக்கிறோமா? பல குறைகளிருந்தாலும் கணவரை நேசிக்கும் மனைவிகள் இந்நாட்களில் உண்டா? புறத்தோற்றத்து அழகை பார்க்காமல் உள்ளத்து அழகை கண்டு நேசிக்கும் கணவன்மார்கள் உண்டா? தேவன் கொடுத்த துணை என்று முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறவர்களாய் நாம் இருக்கிறோமா? தேவன் என் வாழ்வில் தவறு செய்யவே மாட்டார். அவர் செய்வதெல்லாம் என்மீது அன்பு வைத்து செய்தவை மட்டுமே என்ற எண்ணம் உண்டா? இல்லை குறைகளைக் கண்டு தேவனை குறை சொல்லுகிறோமா?

 

பிரச்சனைகள், போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை. பிரச்சனைகளோடு போராடி வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் அனுமதிக்கிறார். சிறகடித்து பறந்து அழகாய் காணப்படும் வண்ணத்துப்பூச்சி கூட்டுப்புழுவாக இருந்து தன்னை சுற்றி ஒரு கூடு அமைத்து பின் அக்கூட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும். அப்பொழுதுதான் அது அழகிய வண்ணத்துப்பூச்சியாகும். பாவம் அந்த புழுவை அதன் காலத்திற்கு முன்பே விடுவித்தோமானால் வண்ணத்துப்பூச்சியாய் அல்ல ஊனமுற்ற புழுவாகவே அதன் வாழ்க்கை முடிந்து விடும்.  

 

எனவே நாம் பாடுகளின்போது அன்பு, பொறுமை, தாழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய ஆவியின் கனி கொடுக்கும் போது கனி தரும் ஜீவியமாக நம் வாழ்வு மாறிவிடும். அப்பொழுது பிதா நாம் வேண்டிக்கொள்வதை குமாரன் மகிமைப்படும்படியாகத் தந்தருளுவார். ஆமென் .

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

ஆகஸ்ட் 15 வாலிபர் முகாம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் பின் தொடர் பணிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)