இன்றைய தியானம்(Tamil) 13.03.2025
இன்றைய தியானம்(Tamil) 13.03.2025
மூங்கில் விதை
"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்" - சங்கீதம் 119:71
ஒரு வாலிபன் போதகரிடம் சென்று என் வாழ்வில் அடுத்தடுத்து வரும் கஷ்டம், துன்பங்களை என்னால் தாங்கமுடியவில்லை என்றான். உடனே போதகர் நான் ஒன்று சொல்கிறேன், கவனமாகக் கேள் என்றார். தேவன் முதலில் செடி, கொடிகளை உண்டாக்குகையில் புல் விதையையும், மூங்கில் விதையையும் ஊன்றினார். ஆனால் ஒரு வருடத்தில் புல் வளர்ந்து செழித்திருந்தது. மூங்கில் விதை துளிர்க்க ஐந்து வருடமாயிற்று. ஆனால் ஆறு மாதத்தில் வானுயர ஓங்கி வளர்ந்தது. புல் வளருவதைக் கண்ட தேவன் மூங்கில் விதை வளரும் வரைக் காத்துக் கொண்டிருந்தார். ஐந்தாண்டுகள் வரை அது காத்திருந்து வேர்களை விட்டு ஆழமான பின், துளிர்த்து ஓங்கி வளர்ந்தது. அதுபோலதான் நமக்கு வரும் கஷ்டம், துன்பம் நம்மை உருவாக்குவதற்குத்தான். தேவன் நம்மை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கும்போது அவை உதவியாக இருக்கும் என்றார்.
அதுபோல வேதத்திலும் கூட யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் பகைத்தனர். யோசேப்பினுடைய ஆடையை உருவி இஸ்மவேலரிடம் விற்றனர். இஸ்மவேலர் எகிப்தில் போத்திபாரிடம் விற்றனர். யோசேப்பு போத்திபார் வீட்டில் வேலை செய்யும் போது வீட்டுஎஜமான் யோசேப்பை வேலைக்காரருக்கு அதிகாரியாக உயர்த்தினார். போத்திபாரின் நம்பிக்கைக்கும் உரியவரானார். பின்பு பொய்யாக போத்திபார் மனைவியால் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றார். அங்கும் கைதிகளை விசாரிக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. பின்புதான் ராஜாவின் சொப்பனத்திற்கான அர்த்தத்தை சொல்லும் வாய்ப்பை பெறுகிறார். அதன் மூலம் ராஜாவிற்கு அடுத்த பொறுப்பில் உயர்த்தப்பட்டார். யோசேப்பின் வாழ்வில் நடந்த சம்பவங்களும், போத்திபார் வீட்டின் அனுபவங்களும் அவருக்கு ஆளுமைத் தன்மையை வளர்த்தது. அவர் உயர்த்தப்பட்டதும் சகோதரரை ஏற்றுக்கொண்டு அவர்களை கவனிக்கிறார். தகப்பன் இறந்ததும் யோசேப்பு பழிவாங்கி விடுவாரோ என பயந்து சகோதரர் தாழ விழுந்து நாங்கள் உனக்கு அடிமை என்றனர். அதற்கு யோசேப்பு, "நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். தேவன் அதை நன்மையாக முடியப் பண்ணினார்" என்றார்.
பிரியமானவர்களே! நீங்கள் கஷ்டப்படுகிறேன் உபத்திரவப்படுகிறேன் என நினைக்கிறீர்களா? உபத்திரவம் உங்களை உருவாக்க, அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவும் என்பதை மறந்து விடாதீர்கள். மூங்கில் விதை முளைக்க எடுத்த வருடங்களோ, யோசேப்பின் கனவு நிறைவேற ஆன காலங்களோ அதிகமாயிருக்கலாம். ஆனால் அது வீணான காலமல்ல உருவாகிய காலம்! ஆகவே உங்கள் வாழ்வில் வரும் தாமதமோ, கடின சூழ்நிலைகளோ எல்லாம் நன்மையே!
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
நம் டியூஷன் சென்டரில் படிக்கும் பிள்ளைகள் தேவ ஞானத்தால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864