இன்றைய தியானம்(Tamil) 11.03.2025
இன்றைய தியானம்(Tamil) 11.03.2025
இரக்கம்
"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" - மத்தேயு 5:7
படித்த வாலிபன் ஒருவன், ஆண்டவரின் ஊழியத்தை முழு நேரமாய் செய்ய தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். ஒரு நாள் தன்னிடம் இருந்த ரூபாயை எண்ணி பஸ்ஸிற்கு வைத்தது போக மீதி ரூபாய்க்கு ஒரு பன் வாங்கிக் கொண்டு ஊழியத்திற்குச் சென்றார். பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு கிராமத்திற்குள் சென்றபோது வீட்டின் வெளியே ஒரு முதியவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் கைப்பிரதியைக் கொடுத்து விட்டு, மிகவும் சோர்வாக இருக்கிறீர்களே, உடம்பு முடியவில்லையா? என்று கேட்டார். அம்முதியவர் சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று சாப்பிட ஏதாவது வேண்டும் என்றார். உடனே அந்த வாலிபன் தன் பையிலிருந்து பன்னை எடுத்து முதியவரிடம் கொடுத்து விட்டு சாப்பிடுங்கள் என சொல்லி பஸ்ஸில் செல்வதற்காக வைத்திருந்த ரூபாய்க்கும் வாழைப்பழம் வாங்கி கொடுத்துவிட்டு, ஜெபித்துச் சென்றார். அடுத்த கிராமத்திற்கு ஊழியத்திற்கு சென்றபோது ஒரு வீட்டில் இவருக்கு சாப்பாடும் கொடுத்து, காணிக்கையும் கொடுத்தனர்.
யோனத்தான் தாவீதிடம் காட்டின நட்பு மிகச் சிறந்தது! தன் தகப்பன் தாவீதை வெறுத்து ஒதுக்கி கொலை செய்யத் தேடினாலும் தாவீதோடு நட்புணர்வோடு பழகுகிறார். தன் தகப்பனுக்கு அடுத்து அரியணை ஏறும் வாய்ப்பு தனக்கு இல்லையென்றும், தாவீதே ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார் எனத் தெரிந்தும் நட்புறவோடு பழகுகிறார். போரில் சவுல், யோனத்தான் இறந்து விட்டனர். தாவீது ராஜாவாக அரியணை ஏறுகிறார். ஏறியதும் சவுலின் குடும்பத்தில் யாராவது இருக்கிறார்களா என்கிறார். யோனத்தானின் மகன் மேவிபோசேத் இருக்கிறார் என்றதும் தாவீது அவனை வரவழைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டு ராஜகுமாரனைப் போல வாழ வைக்கிறார். தேவன் சொல்லுகிறார், இந்த சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று.
ஆம், அதே போல சிறியவராக தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்த தாவீதை நேசித்து பழகியதினிமித்தம், யோனத்தானின் மகனுக்கு இரக்கம் கிடைக்கிறது. ராஜகுமாரனைப் போல் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார். அவரை வளர்க்கிற வேலைக்காரருக்கும் தயவும், இரக்கமும் செய்யப்படுகிறது.
பிரியமானவர்களே! பிறர் மீது இரக்கம் கொள்ள தடையாயிருப்பது நமது மேட்டிமை, பொறாமையே ஆகும். அவற்றைத் தள்ளி விடுவோம். அப்போது இரக்கம் செய்ய முடியும். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என தேவன் சொல்கிறார். நாம் இரக்கமுள்ளவர்களாயிருந்தால் பாக்கியவான்களாய் மாறுகிறோம். அதோடு மட்டுமல்லாது நாமும் இரக்கம் பெறுகிறோம். நாம் மற்றவர்களுக்கு இரங்கி செய்வது தேவன் கணக்கில் வைத்து அவரே ஏற்ற சமயத்தில் நமக்கு இரக்கம் கிடைக்கச் செய்வார். ஆதலால் பிறருக்கு இரக்கம் பாராட்டுவோம் தேவனிடமிருந்து இரக்கம் பெறுவோம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
நம் பள்ளி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்பட்ட சிறுவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864