இன்றைய தியானம்(Tamil) 14.02.2025
இன்றைய தியானம்(Tamil) 14.02.2025
காகம்
"காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது;..." - 1 இராஜா. 17:6
வாரந்தோறும் நான் கிராமத்திற்கு, ஊழியத்திற்கு போவது வழக்கம். ஒரு நாள் ஒரு கிராமத்தில் டீ, வடை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஒரு காகம் பறந்து வந்து வடையைத் தூக்கிச் சென்றது. மரத்தில் அமர்ந்து மூன்று காகங்கள் அதை பங்கிட்டு சாப்பிட்டன. அப்போது டீ குடித்துக் கொண்டே காகத்தைப் பற்றி சிந்தித்தேன்.
ஐந்தறிவு கொண்ட இந்த பறவைக்கு தட்டி பறிப்பது தவறென்று தெரியாது. ஆனால் பகிர்ந்து உண்ணும் நல்ல பழக்கம் இருக்கிறதே என எண்ணினேன். பார்ப்பதற்கு கலர்புஃல்லாக இல்லாத அதனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கலர்புஃல் காரியங்கள் உண்டு. காகங்கள் அதிகாலையிலே எழுந்து கர்த்தரை மகிழ்ச்சியோடு துதித்துப் பாடும். எலியாவின் நாட்களில் தேசத்தில் மழையில்லை பஞ்சம் எங்கும் வறட்சி. எலியாவைத் தேவன் கேரீத் ஆற்றண்டையில் இருக்கும்படி சொல்கிறார். கீழ்ப்படிந்து எலியா செல்கிறார். அங்கு தேவனால் நியமிக்கப்பட்ட காகம் அவருக்கு தினமும் விடியற்காலத்தில் அப்பமும், இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்து கொடுத்தது என வேதத்தில் காண்கிறோம். விடியற்காலம் என்பது 4.30 மணி முதல் 5.30 மணி வரை. இவ்வளவு அதிகாலையில் எழும்பும் பழக்கம் இருப்பதால் தான் தேவன் எலியாவை போஷிக்க காகத்தைப் பயன்படுத்தினார். மேலும் தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியக் கூடிய பறவையாகவும் இருந்தது. நாமும் கூட அதிகாலையிலே எழுந்து தேவனைத் தேடுகிறவர்களாகவும் அவரது வார்த்தைக்கு கேள்வி கேட்காமல் கீழ்ப்படிகிறவர்களாயும் இருக்க வேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். "அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதி.8:17) என வேதத்தில் பார்க்கிறோம். தாவீது ராஜாவும் கூட காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன் என்கிறார். ( சங்5:3) அதனால் தாவீது ராஜா தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக இருந்தார்.
பிரியமானவர்களே! காலை தோறும் அவர் கிருபை புதிதாயிருக்கிறது. அந்த புதிய கிருபையினால் நிரப்பப்பட தினமும் அதிகாலையில் தேவனைத் தேடுவோம். அதோடு மாத்திரமல்ல காகத்தைப் போல தேவனின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிகிறவர்களாயிருப்போம். தேவன் பயன்படுத்திய எல்லோருமே தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்கள். நாமும் காலையில் எழுந்து தேவனோடு உறவாடி தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிவோம். தேவனால் பயன்படுத்தப்படும் பாத்திரமாக இருப்போம்.
- Mrs. ஜோதி ஆனந்த்
ஜெபக்குறிப்பு:
ஈரோட்டில் நடைபெறும் வாலிபர் முகாமின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864