இன்றைய தியானம்(Tamil) 22.01.2025
இன்றைய தியானம்(Tamil) 22.01.2025
இராஜா வரவேண்டும்
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்;ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து,…" - வெளி. 3:20
வண்ண வண்ண பூக்கள், கலர் கலரான லைட்டுகள் என ஒருநாள் அரண்மனை ஜோடிக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் அன்று இராஜாவுக்கு பிறந்தநாள். அரண்மனையிலிருப்போர் சந்தோஷமாக இருந்தனர். இராஜாவும் சந்தோஷமாக சிம்மாசனத்தில் வந்து அமர்ந்ததும், தன் முன் அரண்மனையிலிருக்கும் மந்திரிகள், பணி செய்பவர்கள் எல்லோரும் கூடி வரும் படி சொல்லி, அவரவர் தங்களுக்கு வேண்டியதை கேட்கலாம், கேட்பது கொடுக்கப்படும் என்றார். உடனே மந்திரிகள், பணி செய்பவர்கள் வரிசையில் நின்று கேட்டு, கேட்டதை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக திரும்பிச் சென்றனர். ஆனால் ஒரு சிறு பையன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். இராஜா அவனைப் பார்த்து உனக்கு ஒன்றும் வேண்டாமா? என்றார். அதற்கு அவன் பயந்து கொண்டே இராஜா ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்றான். உடனே இராஜா சந்தோஷமாக வருகிறேன் என்றார். அதற்கான காரியத்தைச் செய்யும்படி ஒரு மந்திரியை நியமித்தார். அந்த மந்திரி இராஜா சிறுவனின் வீட்டிற்கு செல்வதற்கான பாதையை ஆயத்தம் செய்தார். பின் அந்தப் பையன் வீட்டை மாற்றினார். இராஜா வரும் நாளை முன் குறித்து வீட்டிலுள்ள பாத்திரங்கள், பொருட்களை புதிதாக்கினார். இராஜா வந்து அந்தப் பையனின் விருப்பத்தை நிறைவேற்றினார் பார்த்தீர்களா? அவன் கேட்டது ஒரு காரியம் தான். ஆனால் அதனிமித்தம் கிடைத்தது அநேக நன்மைகள்.
ஆயக்காரருக்குத் தலைவரான சகேயு, மனிதர்களால் பாவியென்று தள்ளப்பட்டிருந்தார். ஆனால் இயேசுவைப் பார்க்க ஆசையாயிருந்தார். இயேசு வந்து அவரைப் பார்த்து நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். உடனே ஏற்றுக் கொண்டு அழைத்துப் போனார். அவருடைய வாழ்க்கை மாறியது. பாவியாக இருந்த அவர் ஆபிரகாமின் குமாரனாக, பரலோகராஜ்யத்திற்குரியவராக மாறினார். இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போது, அவர் நம்மை எந்த சூழ்நிலையிலிருந்தாலும் தம் சொந்த மகனாக, மகளாக ஏற்றுக் கொள்கிறார். அதற்கேற்றார் போல் வாழ்வை புதிதாக்குகிறார். இளையகுமாரன் சொத்தை அழித்து வந்த போதிலும், அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு, புது ட்ரஸ், மோதிரம், பாதரட்சை கொடுத்து உயர்த்துகிறார். இளைய குமாரன் வேலைக்காரரில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளும் என்கிறான். ஆனால் தகப்பனோ தன் அன்பினால் மகனாகவே ஏற்றுக்கொள்கிறார்.
பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவால் எல்லாம் கூடும். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் உங்கள் இருதயக் கதவைத் தட்டிக்கொண்டு, நீங்கள் திறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் உள்ளே வந்தால் உங்கள் இருதயம் சுத்திகரிக்கப்படும். உங்கள் வாழ்க்கை அழகாகும். சந்தோஷமும், சமாதானமும் உண்டாகும். அது மட்டுமல்ல சர்வத்தையும் படைத்த தேவனின் சொந்த பிள்ளைகளாவீர்கள். அவர் தரும் சுகத்தை, ஆசீர்வாதத்தை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிராமல், அந்த சிறுவனைப் போல நீர் தான் வேண்டும். நீர் என் உள்ளத்தில் வாரும் என ஏற்றுக்கொள்ளும்போது, எல்லா ஆசீர்வாதங்களும், சுகமும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தேவைகள் சந்திக்கப்படும்.
- J. எபனேசர்
ஜெபக்குறிப்பு
ஆமென் வில்லேஜ் டிவி ஒரு மிஷனெரியாக அநேக இல்லங்களை தேடிச் செல்ல ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864