இன்றைய தியானம்(Tamil) 03.01.2025
இன்றைய தியானம்(Tamil) 03.01.2025
இரு முகம்
"நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்" - யோவான் 4:29
வருடத்தின் முதல் மாதமான "ஜனவரி" என்ற பெயர் ரோமானிய கடவுளான ஜானஸ் என்ற பெயரிலிருந்து வந்தது. ஜானஸ் என்று சொல்லக் கூடிய ரோமானிய தெய்வத்தின் உருவம், இரண்டு மனித முகங்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு முகம் பின்னால் திரும்பி பார்த்திருக்கும். மற்ற முகம் முன்னால் பார்க்கும். ஆண்டின் முடிவு மற்றும் துவக்கத்தை குறிக்கும் வண்ணம் இந்த உருவத்தின்படி ஜனவரி என சூட்டியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஒவ்வொருவரின் வாழ்விலும் இயேசுவை சந்திக்கும் முன், இயேசுவை சந்தித்த பின் என இரண்டு முகங்கள் உண்டு. யோவான் நான்காம் அதிகாரத்திலும் அப்படித்தான் சமாரியாவை சேர்ந்த பெண்ணுக்கும் அமைந்தது.
ஏன் இந்த இரு முகங்கள்? நாம் கடந்து வந்த பாதைகளை பார்த்த வண்ணம் உள்ள ஒரு முகம், நாம் எதிர்நோக்க வேண்டிய சவால்களை நோக்கிய ஒரு முகம். ஒருவேளை நாம் கடந்து வந்த பாதையில், பல தோல்விகளை சந்தித்து இருக்கலாம். அல்லது பல கசப்பான அனுபவங்களையும், அதனால் ஏற்பட்ட கலக்கத்துடனும், மனக்குழப்பத்துடனும் நாம் புதிய ஆண்டிற்குள் பிரவேசித்து இருக்கலாம். ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை நேசிக்கிற, நம்மைத் தூக்கி சுமக்கிற ஆண்டவர் இம்மானுவேலராய் நம்மோடிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நம்முடைய பழைய தோல்விகளுக்கான காரணத்தை யோசித்து, அதில் சீரமைக்கப்பட வேண்டியவற்றை சீரமைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் செயல்பட வேண்டும். சமாரியாவை சேர்ந்த பெண்ணுக்கு இயேசுவை பார்ப்பதற்கு முன், யாரையும் பார்க்கவோ, பேசவோ விருப்பம் இல்லாதிருந்தது. எனவே தான் நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் எடுக்க வருகிறாள். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. இச்சமூகம் என்னை ஒதுக்கி வைத்துள்ளது, நானும் இச் சமூகத்துடன் இணக்கமாக இருக்க விரும்பவில்லை. ஏதோ உயிர் வாழ வேண்டும் எனவே வாழ்கிறேன் என மனம் நொந்த பெண்ணாக வாழ்கிறாள். ஆனால் இயேசுவை சந்தித்த வேளையில், முதலில் அவர் பேச ஆரம்பிக்கிறார். அந்த ஒரு பெண்ணுக்காக இயேசு அவ்வழியாக வந்தார் என நாம் யோவான் 4 : 4 ல் கவனிக்கலாம். மனம் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்ற அவரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது.
அப்பெண் ஆண்டவரோடு பேசினாள், கேள்விகள் கேட்டாள், பதில்களை பெற்றாள். இயேசுவே மேசியா என்பதை புரிந்து கொண்டாள். யாரிடமும் பேசாத அப்பெண், முதல் மிஷனெரியாக ஊருக்குள் சென்று இயேசுவைப் பற்றி அறிவிக்கிறார். அவர் கிறிஸ்துதானோ? என்று பார்க்கும்படி அவர்களை அழைத்தாள். "கிறிஸ்து" என்ற சொல் "christos" என்று கிரேக்கத்தில் அழைக்கப்படுகிறது. அதற்கு மேசியா, மீட்பர் என்று அர்த்தம். நம்முடைய மீட்பர் வந்துவிட்டார் என்று சமாரியா பெண் கூறியதை அனைவரும் ஏற்று இயேசுவை சந்தித்தனர். இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட ஊரார் அவரை மேலும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லி, அவர் "மெய்யாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர்' என்று அறிக்கையிட்டு விசுவாசித்தனர்.
அன்பு நண்பரே! நாமும் கூட இப்புதிய ஆண்டில் பழைய வேதனைகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் இயேசுவை பிறருக்கு அறிமுகப்படுத்துவோம், ஆயத்தமாவோம். பிறரை ஆயத்தமாக்குவோம். கர்த்தர் தாமே நம்மை ஆறுதல்படுத்தி, நம்முடைய வாழ்வின் சிதைக்கப்பட்ட பகுதிகளை சரி செய்வாராக. ஆமென்.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு:
இன்று நம் வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் தேவன் வல்லமையாய் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864